சின்னம் பொருத்தும் பணியின்போது வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 12 Feb 2022 10:47 PM IST (Updated: 12 Feb 2022 10:47 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் சின்னம் பொருத்தும் பணியின்போது வேட்பாளர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்
48 வார்டுகள் 
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு காவல்துறையின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் தயார் செய்யும் பணிகள் உள்ளிட்ட தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. கரூர் மாநகராட்சியை பொறுத்தவரை 48 வார்டுகள் உள்ளன. 
சின்னம் பொருத்தும் பணி 
இதில் 22-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வாகி உள்ளார். இந்நிலையில் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. இதனையொட்டி கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளை சேர்ந்த வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கட்சி சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. தொடர்ந்து வேட்பாளர்களுக்கு வாக்கு அளிக்கும் முறை குறித்தும், வாக்கு எண்ணிக்கை முறை குறித்தும் அலுவலர்கள் வாக்கு எந்திரத்தினை வைத்து விளக்கினர்.
வாக்குவாதம்
இந்நிலையில் 12-வது வார்டுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணியின் போது, சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் பெயர் ஏற்கனவே வெளியிட்ட வரிசைப்படி இல்லாமல், சின்னம் பொருத்தும் போது 5-வது இடத்தில் உள்ளதாக கூறி அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
தொடர்ந்து அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையரை சந்தித்து இதுகுறித்து முறையிட்டனர். அப்போது மாநகராட்சி ஆணையர் தேர்தல் விதிமுறைப்படி அகரவரிசையில் தான் சின்னம் பொருத்தும் பணி நடைபெறுகிறது என தெரிவித்தார். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து 12-வது வார்டுக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story