ஓசூர் வனக்கோட்டத்தில் இன்று பறவைகள் கணக்கெடுப்பு பணி


ஓசூர் வனக்கோட்டத்தில் இன்று பறவைகள் கணக்கெடுப்பு பணி
x
தினத்தந்தி 12 Feb 2022 10:49 PM IST (Updated: 12 Feb 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி வனத்துறை மூலம் இன்று நடக்கிறது.

ஓசூர்:
பறவைகள் கணக்கெடுப்பு
தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் மூலம் 3 கட்டங்களாக, பறவைகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக கழிமுக துவார பகுதிகளிலும், 2-ம் கட்டமாக காப்புக்காடுகளுக்கு வெளியில்  ஈரநிலப் பகுதிகளிலும், 3-ம் கட்டமாக, காப்புக்காடுகளில் உள்ள ஈரநில பகுதிகளிலும் பறவைகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, ஓசூர் வனக்கோட்டத்தில் காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள ஈர நிலப்பகுதிகளான ராமநாயக்கன் ஏரி, பாரூர் ஏரி, கே.ஆர்.பி. அணை, கெலவரப்பள்ளி அணை, தளி ஏரி உள்ளிட்ட 18 நீர்நிலைகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் 10 மணி வரை பறவைகள் கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி பயிற்சி பெற்ற அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பின்போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த பயிற்சி், ஆன்லைன் மூலம் நேற்று வழங்கப்பட்டது. 
முன்னெச்சரிக்கை
இந்த பறவைகள் கணக்ெகடுக்கும் அலுவலர்களுக்கு பயிற்சி, ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயினி தலைமையில் நடந்தது. இதில், ஓசூர் வனக்கோட்ட வனச்சரக அலுவலர்கள், வன கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ், கவுரவ வனஉயிரின காப்பாளர் சஞ்சீவ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். சம்பந்தப்பட்ட வனப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கணக்கெடுப்பு பணிக்கான தனிக் குழுக்களாக பிரிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 
கணக்கெடுப்பு பணியின் போது, அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கணக்கெடுப்பு குழுக்களுக்கும் முதலுதவி பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

Next Story