தினத்தந்தி புகார் பெட்டி


அரியலூர்
x
அரியலூர்
தினத்தந்தி 12 Feb 2022 10:55 PM IST (Updated: 12 Feb 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மழைமானி அமைக்க கோரிக்கை
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வசித்து வருகின்றனர்.  இந்த கிராமத்தில்  மழை மானி இல்லை. இதனால் இப்பகுதியில்  எவ்வளவு மழை பதிவாகியது என்று அறிந்துக்கொள்ள முடியவில்லை. இதனால் மழை மானி வைத்தால் எவ்வளவு மழை பதிவாகியது என்று விவசாயிகள் அறிந்து கொண்டு அதற்கு தகுந்தார்போல் பயிர் சாகுபடி செய்வார்கள். எனவே மழை மானி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
நஸ்ருதீன் ஷா, கீழப்பழுவூர், அரியலூர்.

கிணற்றை சுற்றி தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் அன்னமங்கலம் ஊராட்சியில் அரசலூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் குடியிருப்பு பகுதியில் அரசலூர்- அன்னமங்கலம் சாலையின் ஓரத்தில் விவசாய கிணறு ஒன்று உள்ளது. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு கிணற்றின் ஓரத்தில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. அதன் பிறகு சாலை சீர்திருத்தம் செய்யும்போது சாலையின் உயரம் அதிகரிப்பட்டதால் தடுப்புச்சுவரின் உயரம் குறைந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த சாலையின் வழியாக செல்பவர்கள் தடுமாறி கிணற்றுக்குள் விழும் சூழ்நிலை உள்ளது. எனவே விபத்துகள் ஏதும் நடப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையோரத்தில் உள்ள கிணற்றை சுற்றி தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜேந்திரன், அரசலூர், பெரம்பலூர்.

குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி 
பெரம்பலூர் 4 ரோடு செல்வாநகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நகராட்சி சார்பில் வழங்கப்பட்டு வந்த குடிநீர் கடந்த 6 மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரியசாமி, பெரம்பலூர். 

குடிமகன்களின் கூடாரமாக மாறிய பாலம்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் 6 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு மதுவாங்கி செல்லும் குடிமகன்கள் வயல்வெளிகள் மற்றும் பாலங்கள், சாலை ஓரங்களில் அமர்ந்து மது அருந்துகின்றனர். பின்னர் காலி பாட்டில்களை அந்த பகுதியிலேயே போட்டுவிட்டு செல்கின்றனர். சிலர் உடைத்தும் போடுகின்றனர். இதனால் வயல்களில் வேலை செய்வோர், சாலைகளில் நடந்து செல்வோர் பாதிக்கப்படுகின்றனர். இதனால் இருசக்கர வாகனங்களும் பஞ்சராகிவிடுகிறது. திருமணஞ்சேரி பாலத்தில் மதுபாட்டில்களை உடைத்து போடுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் குடிமகன்களின் கூடாரமாக பாலம் மாறி உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
ராமபாண்டித்துரை, கறம்பக்குடி, புதுக்கோட்டை.

நாய்கள் தொல்லை
கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகிறது. இந்தநிலையில் சாலையில் செல்லும் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் வரை பின்னால் துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. மேலும் சாலைகளின் குறுக்கே நாய்கள் ஓடி செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், குளித்தலை, கரூர்.



Next Story