திருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா; வெள்ளித்தேரில் சுவாமி வீதி உலா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழாவில் நேற்று வெள்ளித்தேரில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழாவில் நேற்று வெள்ளித்தேரில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மாசித் திருவிழா
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 6-ம் நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
காலை 7 மணிக்கு மேலக் கோவிலில் இருந்து சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். மாலையில் கீழ ரதவீதியில் உள்ள திருவாவடுதுறை ஆதீன மண்டபத்திற்கு வந்த சுவாமி குமரவிடங்கபெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் மேலக்கோவிலுக்கு சென்றனர்.
வெள்ளித்தேரில் வீதி உலா
அங்கு இருந்து இரவில் சுவாமி வெள்ளித் தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாத யாத்திரையாகவும் கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சிலர் பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இன்று சிவப்பு சாத்தி
விழாவின் 7-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரானை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கின்றது. தொடர்ந்து காலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் உருகுசட்ட சேவை, 8.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் சண்முகவிலாச மண்டபம் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.
மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் சிவன் அம்சமாக தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா
8-ம் விழாவான நாளை (திங்கட்கிழமை) அதிகாலையில் சுவாமி சண்முகர் வெண்பட்டு அணிந்து, வெண் நிற மலர்கள் சூடி வெள்ளை சாத்தி கோலத்தில் பிரம்மன் அம்சமாக பெரிய வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
பகல் 12 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை நிற பட்டு உடுத்தி, பச்சை இலை மற்றும் மரிக்கொழுந்து மாலை அணிந்து பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை நிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
தேரோட்டம்
10-ம் நாளான வருகிற 16-ந் தேதி (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விநாயகர், சுவாமி குமரவிடங்கபெருமான், தெய்வானை அம்பாள் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.
11-ம் நாளான (வியாழக்கிழமை) இரவு சுவாமி- அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story