கனமழையால் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன


கனமழையால் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன
x
தினத்தந்தி 12 Feb 2022 11:41 PM IST (Updated: 12 Feb 2022 11:41 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழையால் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழையால் 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
மழைநீரில் நெற்பயிர்கள் சாய்ந்தன
மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 லட்சத்து 72 ஆயிரம் ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் பயிரிடப்பட்டு தற்போது முழுவீச்சில் அறுவடை நடைபெற்று வருகிறது. 1 லட்சம் ஏக்கருக்கும் மேல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் திடீரென்று பெய்த கனமழையால் அகரகீரங்குடி, கோடங்குடி, வழுவூர், பண்டாரவாடை, நெய்க்குப்பை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்ய வேண்டிய 20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமாகி விட்டன. 
வயலில் தேங்கிய மழைநீரில் பயிர்கள் சாய்ந்து கிடப்பதால் முளைக்க தொடங்கி விட்டது. மேலும் முற்றிய நெல்மணிகள் உதிர்ந்து மகசூல் இழப்பும் ஏற்படும் நிலை உள்ளது. அறுவடை முடிந்த பின்னர் பலன் தரக்கூடிய உளுந்து விதைகளும் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல்
2 நாட்கள் மழை பெய்ததால் அறுவடை பணியை விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ளனர். கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் அறுவடை செய்து விற்பனைக்காக அடுக்கி வைத்திருந்த நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
கனமழையால் பாதிப்பை சந்தித்து வரும் விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்த நெல்லை ஈரப்பதத்தை கணக்கில் கொள்ளாமல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் விவசாயிகள் மேலும் கவலையில் ஆழ்ந்து விட்டனர்.
கொள்ளிடம்
கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பெய்த கன மழையினால் வடகால், குடவாசல், எடமணல், வழுதலை குடி, திருக்கருக்காவூர் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து சேதமடைந்தன. 
மேலும் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் விவசாயிகள், தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அறுவடை செய்யப்பட்ட வைக்கோல் மழைநீரில் நனைந்து கால்நடைகளுக்கு தீவனத்திற்கு பயன்படுத்தப்பட முடியாமல் அழுகி வீணாகி விட்டது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

Next Story