தேர்தலை புறக்கணிப்பதாக கூறிய பொதுமக்களுடன் கலெக்டர் ஆலோசனை
கொல்லங்கோடு நகராட்சி தேர்தலை புறக்கணிப்பதாக கூறிய பொதுமக்களுடன் கலெக்டர் அரவிந்த் ஆலோசனை நடத்தினார். அப்போது, வாக்களிக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அறிவுறுத்தினார்.
நாகர்கோவில்
கொல்லங்கோடு நகராட்சி தேர்தலை புறக்கணிப்பதாக கூறிய பொதுமக்களுடன் கலெக்டர் அரவிந்த் ஆலோசனை நடத்தினார். அப்போது, வாக்களிக்க முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கிள்ளியூர் தாலுகா மார்த்தாண்டன்துறை, நீரோடி, வள்ளவிளை, கொல்லங்கோடு பகுதிகளை உள்ளடக்கிய கொல்லங்கோடு நகராட்சி தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில், தேர்தல் தொடர்பான தளவாட சாமான்களை வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்வதை தடுக்க கூடாது. தேர்தல் பணிக்கு செல்லும் அரசு வாகனங்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது. தேர்தலின்போது வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க செல்லும் வாக்காளர்களை தடுக்க கூடாது. வாக்குப்பதிவு நேரத்தில் வாக்காளர்களுக்கு இடையூறு எதுவும் செய்யக்கூடாது. தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக கடைபிடித்து கொல்லங்கோடு நகராட்சிக்கான உள்ளாட்சி தேர்தல் சுமூகமாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என குமரி மாவட்ட கலெக்டர் மற்றும் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரால் வலியுறுத்தப்பட்டது.
வழக்கு தொடுக்க அதிகாரம்
மேலும் இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள், நடைபெற உள்ள கொல்லங்கோடு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், யாரேனும் வாக்களிக்க மறுத்து முறையீடு செய்தால் தேர்தல் நடைமுறையை பின்பற்றுமாறு தெரிவிப்போம் என்றும், தேர்தல் பணியேற்கும் அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதி அளித்தனர்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான மாதிரி நடத்தை விதி எண் 47 மற்றும் 48-ன்படி வழக்கு தொடுக்க மாநில தேர்தல் அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் அலர்மேல் மங்கை, உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வீராசாமி (பொது), நாகராஜன் (தேர்தல்), போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை, நகராட்சி அதிகாரிகள், மார்த்தாண்டன்துறை பங்குதந்தை அசிசிஜாண், வள்ளவிளை பங்குதந்தை ஜாண், வள்ளவிளை பங்கு பேரவை செயலர் பெனாலாஸ், வள்ளவிளை பங்குபேரவை உறுப்பினர்கள் ரினோ, பிரிட்டில், பிரான்சிஸ் சேவியர், மார்த்தாண்டன்துறை பங்கு பேரவை உறுப்பினர் ஹெப்பின் ஸ்டெல்லாஸ், நீரோடியை சேர்ந்த ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கொல்லங்கோடு நகராட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறி பொதுமக்கள் சிலர் போராட்டம் நடத்தியிருந்தனர். இந்தநிலையில் தேர்தலை சுமூகமாக நடத்துவது தொடர்பாக கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story