சட்டக்கல்லூரிகளில் பணியிடங்களை நிரப்புவதில் உள்ஒதுக்கீட்டை பின்பற்ற அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி


சட்டக்கல்லூரிகளில் பணியிடங்களை நிரப்புவதில் உள்ஒதுக்கீட்டை பின்பற்ற அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 13 Feb 2022 12:54 AM IST (Updated: 13 Feb 2022 12:54 AM IST)
t-max-icont-min-icon

சட்டக்கல்லூரிகளில் பணியிடங்களை நிரப்புவதில் உள்ஒதுக்கீட்டை பின்பற்ற அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை,

அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக கல்லூரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. இதில், வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இதை எதிர்த்து பழனியப்பன் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே ரத்து செய்துள்ளது. எனவே, பல்கலைக்கழகத்தின் அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, சட்டப்பல்கலைக்கழகத்தின் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், கல்வி நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்பும் விவகாரத்தில் கோர்ட்டு தலையிடுவதில்லை என்று கூறிய நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.


Next Story