ராஜேந்திரபாலாஜியிடம் போலீசார் 11 மணி நேர விசாரணை
விருதுநகரில் விசாரணைக்கு ஆஜரான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் 11 மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
விருதுநகர்,
விருதுநகரில் விசாரணைக்கு ஆஜரான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் 11 மணி நேரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
பணமோசடி வழக்கு
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது சாத்தூர் எலக்ட்ரானிக்ஸ் கடை அதிபர் ரவீந்திரன் மற்றும் முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி விஜய நல்லதம்பி ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி பணமோசடி வழக்குகள் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் பதிவு செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து தலைமறைவான ராஜேந்திர பாலாஜி கர்நாடக மாநிலம் ஹாசன் மாநிலத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரகால நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.
விசாரணை
இதனையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், ராஜேந்திர பாலாஜியின் உதவியாளர்கள் பலராமன், பாபு ராஜ் மற்றும் வக்கீல் முத்துப்பாண்டி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து கடந்த ஜனவரி 31-ந் தேதி ராஜேந்திர பாலாஜி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அன்றைய தினம் கொரோனா பாதிப்படைந்திருந்த அவரிடம் கொரோனா பாதிப்பில்லை என்ற சான்றிதழ் இல்லாததால், அன்றைய தினம் விசாரணை நடைபெறவில்லை.
இதற்கிடையில் கே.டி.ராஜேந்திர பாலாஜி சார்பில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நேற்று மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திர பாலாஜியை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பியிருந்தனர். அதன்படி நேற்று பகல் 11 மணியளவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், இன்ஸ்பெக்டர் கணேஷ் தாஸ் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
மதிய உணவுக்கு பின்பும் தொடர்ந்து தீவிர விசாரணை நடந்தது. இந்த விசாரணை இரவு 10 மணி வரை நீடித்தது. அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மற்றும் அ.தி.மு.க. வக்கீல் அணியினர் வந்திருந்தனர்.
Related Tags :
Next Story