காரில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சா பறிமுதல் 3 பேர் கைது
மார்த்தாண்டத்தில் காரில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கேரளாவை சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளனர்.
குழித்துறை,
மார்த்தாண்டத்தில் காரில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து கேரளாவை சேர்ந்த 3 பேரை கைது செய்துள்ளனர்.
ரகசிய தகவல்
கேரள மாநிலத்தில் இருந்து கஞ்சாவை குமரி மாவட்டத்திற்கு கடத்தி வந்து விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இதனை தடுப்பதற்காக குமரி மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு கஞ்சா கடத்தி வருபவர்களை கைது செய்து அவற்றை பறிமுதல் செய்து வருகிறார்கள். ஆனால், கஞ்சா கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கேரளாவில் இருந்து ஒரு கும்பல் காரில் மார்த்தாண்டம் பகுதியை நோக்கி கஞ்சா கடத்தி வருவதாக மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
காருடன் கஞ்சா பறிமுதல்
அதைத்தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இன்ஸ்பெக்டரின் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் மார்த்தாண்டம் வெட்டுமணி சந்திப்பு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரவு 10 மணியளவில் குழித்துறை வழியாக மார்த்தாண்டம் நோக்கி வேகமாக ஒரு கார் வந்தது. அந்த காரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். சோதனையில், காருக்குள் சிறு சிறு பார்சல்களில் மொத்தம் 10 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் கஞ்சாவை காருடன் பறிமுதல் செய்தனர்.
3 பேர் கைது
மேலும், காரில் இருந்த 3 பேரையும் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.
விசாரணையில், கேரள மாநிலம் ஆறாலுமூடு அதியனூர் மூலச்சல்கோணத்தை சேர்ந்த அனூப் (வயது35), வெள்ளநாடு புனலால் பகுதியை சேர்ந்த பிரோஷ்(42), நெய்யாற்றின்கரை கடவட்டாரம் பகுதியை சேர்ந்த ஹரி சுதன்(41) என்பதும், கஞ்சாவை குமரி மாவட்டத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
Related Tags :
Next Story