இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை: 2-வது நாளாக திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்; ரோட்டின் இருபுறமும் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
திம்பம் மலைப்பாதையில் 2-வது நாளாக இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ரோட்டின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சத்தியமங்கலம்
திம்பம் மலைப்பாதையில் 2-வது நாளாக இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ரோட்டின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்துக்கு தடை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனை சாவடியில் இருந்து திம்பம் மலைப்பாதையில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் இரவு நேரத்தில் வாகனங்கள் செல்ல தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவு கடந்த 10-ந் தேதி மாலை 6 மணிக்கு அமலுக்கு வந்தது.
இதைத்தொடர்ந்து அன்று இரவு வாகனங்கள் செல்ல திம்பம் மலைப்பாதையில் தடை விதிக்கப்பட்டது. பின்னர் மறுநாளான நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து வரிசையாக சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
2-வது நாளாக...
இதேபோல் நேற்று முன்தினம் இரவு பண்ணாரி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள் அனைத்தும் 2-வது நாளாக நேற்று காலை 6 மணிக்கு திம்பம் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டன. பண்ணாரி சோதனை சாவடியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக திம்பம் மலைப்பாதையில் அணிவகுத்து சென்றன.
இதேபோல் கர்நாடக மாநிலத்தில் இருந்து சத்தியமங்கலத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் தாளவாடியை அடுத்த காரப்பள்ளம் சோதனை சாவடியில் இருந்து அனுமதிக்கப்பட்டன. இதன்காரணமாக திம்பம் மலைப்பாதையில் எதிரும், புதிருமாக சாலையின் இருபுறமும் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஊர்ந்து வந்தன.
போக்குவரத்து நெரிசல்
குறிப்பாக பண்ணாரி சோதனை சாவடியில் வாகனங்களின் எண், அதன் டிரைவர்கள் மற்றும் செல்போன் எண் போன்ற விவரங்களை போலீசார் ஒரு நோட்டில் குறித்து வைத்த பின்னர் தான் திம்பம் மலைப்பாதையில் செல்ல அனுமதித்தனர். அதிலும் 2 போலீசார் மட்டுமே இந்த விவரங்களை எழுதியதால் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால் திம்பம் மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
உணவு- குடிநீர் வசதி
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘பண்ணாரி சோதனை சாவடியில் மாலை 6 மணிக்கு தடுத்து நிறுத்தப்படுகிறோம். மறுநாள் காலை 6 மணிக்குத்தான் செல்ல அனுமதிக்கப்படுகிறோம். இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பண்ணாரி பகுதியில் சாலையோரம் அப்படியே நிற்கின்றன. 12 மணி நேரம் காத்து கிடப்பதால் அந்த வாகனங்களின் ஓட்டுனர்கள், கிளீனர்கள் ஆகியோருக்கு பண்ணாரி பகுதியில் முறையான உணவு வசதி, குடிநீர் வசதி கிடைப்பதில்லை. இதனால் நாங்கள் உணவு மற்றும் குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்படுகிறோம். காட்டுப்பகுதி என்பதால் எங்களால் சரியாக தூங்கவும் முடியவில்லை.
எனவே இதற்கு அரசு உடனடியாக தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
Related Tags :
Next Story