மக்காச்சோளம் விலை தொடர்ந்து ஏறுமுகம்


மக்காச்சோளம் விலை தொடர்ந்து ஏறுமுகம்
x
தினத்தந்தி 13 Feb 2022 2:14 AM IST (Updated: 13 Feb 2022 2:14 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை பகுதிகளில் மக்காச்சோளம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை பகுதிகளில் மக்காச்சோளம் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
மக்காச்சோளம் சாகுபடி 
வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை காரணமாக மானாவாரி பயிரான மக்காச்சோளம்  ஆயிரம் ஏக்கர் அளவில் ஏழாயிரம்பண்ணை, சங்கரபாண்டியபுரம், சத்திரம், சிப்பிபாறை, வல்லம்பட்டி, மஞ்சள் ஓடைப்பட்டி, செவல்பட்டி, தாயில்பட்டி, எட்டக்காபட்டி, விஜயகரிசல்குளம், சுப்பிரமணியபுரம், உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டு்ள்ளது. 
விதைக்கும் தருணத்தில் குவிண்டாலுக்கு ரூ.1,400 விலை இருந்தது. அறுவடை தொடங்கும் சமயத்தில் குவிண்டால் ரூ. 1,800 ஆக மாறியது. முற்றிலும் அறுவடை முடிந்து விற்பனைக்கு தயாரான பிறகு குவிண்டாலுக்கு ரூ.1,900 முதல் ரூ.2,100 வரை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
விலை ஏறுமுகம் 
இதுகுறித்து விவசாயி அழகர் ராமானுஜம் கூறியதாவது:- 
கடந்த 2 ஆண்டுகளாக மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலால் விவசாயிகள் ஏராளமானோர் மிகவும் பாதிக்கப்பட்டனர். இருப்பினும் இந்த ஆண்டு ஆரம்பம் முதல் தொடர்ந்து மழை பெய்ததால் மக்காச்சோளத்தை ஆர்வமுடன் சாகுபடி செய்தனர். 
அதற்கு தகுந்தாற்போல் மக்காச்சோளம் கதிரும் பருமனாகவும், தரமானதாகவும், விளைந்தது. இதனால் சங்கரன்கோவில், சிவகாசி, விருதுநகர் ஆகிய பகுதிகளில்  இருந்து வியாபாரிகள் ஆர்வத்துடன் வந்து வாங்கி செல்கின்றனர். 
ஆதலால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதனால் மக்காச்சோளத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. சில பகுதிகளில் மேலும் விலை உயர வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் கருதுவதால் மக்காச்சோளத்தை கையிருப்பு வைக்கவும் தொடங்கியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story