நாகர்கோவிலில் தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்ட பொதுமக்கள் சிகிச்சை அளிக்க தாமதப்படுத்தியதால் தொழிலாளி இறந்ததாக குற்றச்சாட்டு


நாகர்கோவிலில் தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்ட பொதுமக்கள் சிகிச்சை அளிக்க தாமதப்படுத்தியதால் தொழிலாளி இறந்ததாக குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Feb 2022 2:18 AM IST (Updated: 13 Feb 2022 2:18 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் சிகிச்சை அளிக்க தாமதப்படுத்தியதால் தொழிலாளி இறந்ததாக கூறி தனியார் ஆஸ்பத்திரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

நாகர்கோவில், 
நாகர்கோவிலில் சிகிச்சை அளிக்க தாமதப்படுத்தியதால் தொழிலாளி இறந்ததாக கூறி தனியார் ஆஸ்பத்திரியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தொழிலாளி சாவு
நாகர்கோவில் அருகே இலந்தையடிதட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 56), தொழிலாளி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை உறவினர்கள் பட்டகசாலியன்விளையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவர் வீடு திரும்பினார். 
இந்தநிலையில் நேற்று காலை அவருக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே உறவினர்கள் அவரை வாகனத்தில் ஏற்றி சிகிச்சைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி நிர்வாகம் வெங்கடேஸ்வரனுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் டாக்டர்கள் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்காமல், வாகனத்தில் இருந்தபடி வெங்கடேஸ்வரனை பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. 
ஆஸ்பத்திரி முற்றுகை
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு தொழிலாளி உடலுடன் போராட்டம் நடத்தினர். வெங்கடேஸ்வரனுக்கு சிகிச்சை அளிப்பதில் ஆஸ்பத்திரி நிர்வாகம் தாமதப்படுத்தியதால் அவர் இறந்தார் எனவும், முன்னதாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் கட்டிய ரூ.7 லட்சத்தை திருப்பி தர வேண்டும் என கூறினர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக இலந்தையடிதட்டு மக்கள் மற்றும் விஜய் வசந்த் எம்.பி., காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் போராட்டத்தில் குதித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் விஜயகுமார், நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து உறவினர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து சென்றனர்.
இதனால் 5 மணி நேரம் நீடித்த முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story