தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை


தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை
x
தினத்தந்தி 13 Feb 2022 2:26 AM IST (Updated: 13 Feb 2022 2:26 AM IST)
t-max-icont-min-icon

கிலாபத் இயக்கத்தில் தொடர்புடையதாக கூறப்பட்ட தஞ்சையை சேர்ந்த 3 பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

தஞ்சாவூர்;
கிலாபத் இயக்கத்தில் தொடர்புடையதாக கூறப்பட்ட தஞ்சையை சேர்ந்த 3 பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது செல்போன் மற்றும் ஆவணங்களை எடுத்து சென்றனர். சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிலாபத் இயக்கம்
கிலாபத் இயக்கத்தை சேர்ந்த மதுரை அப்துல்காதர் என்பவருக்கு ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், இந்துக்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் அவர் தவறான கருத்துக்களை பரப்பி வருவதாகவும் கூறி கடந்த ஓராண்டுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
அவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தஞ்சையில், 3 பேர் வீடுகளில் சோதனை
அவர்களிடம் நடத்திய விசாரணையில், கிலாபத் இயக்கத்தில் தொடர்புடையதாக கூறி தஞ்சை கீழவாசல் தைக்கால் தெருவை சேர்ந்த அப்துல் காதர்(வயது 49), முகமதுயாசின்(30), தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காவேரி நகரை சேர்ந்த அகமது(37) ஆகியோரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள(என்.ஐ.ஏ.) நேற்று காலை 5.30 மணி முதல் 10 மணி வரை சோதனை நடத்தினர்.
அப்துல் காதர் வீட்டில் 10 மணி வரையும், முகமது யாசின் மற்றும் அகமது ஆகியோர் வீடுகளில் 9 மணி வரையும் இந்த சோதனை நடத்தப்பட்டது. 
செல்போன்கள் பறிமுதல்
இந்த சோதனையின்போது வீட்டில் இருந்த யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. 
சோதனை முடிவில் 3 பேரின் செல்போன்கள், ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை மட்டும் பறிமுதல் செய்து அதிகாரிகள் எடுத்து சென்றனர்.
போலீசார் குவிப்பு
இந்த நிலையில் அப்துல்காதர் மற்றும் முகமது யாசின் ஆகியோரது வீடுகளில் தேசிய புலனாய்வு துறையினர் சோதனை நடத்துவதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள், ஆண்கள், இளைஞர்கள் அங்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், சந்திரா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டம்
அப்போது, இஸ்லாமியர்கள் தேசிய புலனாய்வு அமைப்பை கண்டித்தும், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். சோதனை முடிந்து வெளியே வந்த தேசிய புலனாய்வு அமைப்பினரை, இஸ்லாமியர்கள் சூழ்ந்து கொண்டு தேசிய புலனாய்வு அமைப்பினர் ஒழிக என முழக்கங்களை எழுப்பினர்.
இதனையறிந்த தேசிய புலனாய்வு துறையினர் அங்கிருந்து வேகமாக சென்று தங்களது வாகனத்தில் ஏறினர். அப்போது இஸ்லாமியர்கள், தசிய பலனாய்வு அமைப்பினர் வந்த வாகனத்தை சூழ்ந்து தரையில் அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story