பெங்களூருவில் ‘ஹிஜாப்'-பை கழற்றும்படி மாணவிக்கு ஆசிரியை உத்தரவு - பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்


பெங்களூருவில் ‘ஹிஜாப்-பை கழற்றும்படி மாணவிக்கு ஆசிரியை உத்தரவு - பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
x
தினத்தந்தி 13 Feb 2022 2:29 AM IST (Updated: 13 Feb 2022 2:29 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ஹிஜாப்பை கழற்றும்படி மாணவிக்கு ஆசிரியை உத்தரவிட்டதை கண்டித்து பெற்றோர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு:

கல்லூரிகளுக்கு விடுமுறை

  உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அதற்கு அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினர். பதிலுக்கு இந்து மாணவர்களும் காவி துண்டு போட்டு வந்தனர். இதனால் மத ரீதியிலான மோதல் போக்கு ஏற்பட்டது. இதுதொடர்பாக கடந்த 8-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இது கர்நாடகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து உயர்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

  அதே நேரத்தில் 1 முதல் 7-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பெங்களூரு சந்திரா லே-அவுட்டில் உள்ள வித்யா சாகர் தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவி ஒருவர், ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தார். அதை கண்ட அந்த வகுப்பு ஆசிரியை, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால் ஹிஜாப்பை கழற்றும்படி அறிவுறுத்தியுள்ளார்.

பெற்றோர் வாக்குவாதம்

  இதை ஏற்க அந்த மாணவி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அந்த மாணவியின் பெற்றோர் அந்த பள்ளிக்கு வந்து அந்த ஆசிரியையிடம் கேட்டனர். அந்த பள்ளி நிர்வாகத்துடன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த அந்த பள்ளியின் நிர்வாகம், ‘‘ஹிஜாப் அணிந்து வந்த அந்த மாணவியிடம் கர்நாடக ஐகோர்ட்டு வழங்கியுள்ள இடைக்கால உத்தரவு குறித்து எடுத்து கூறப்பட்டது. இதன் பின்னணியில் எங்களுக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை’’ என்றது.

  ஆனால் அந்த மாணவியின் பெற்றோர் கூறும்போது, ‘‘ஹிஜாப் குறித்து அந்த ஆசிரியை கரும்பலகையில் தவறாக எழுதியுள்ளார். அதனால் அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும்’’ என்றனர். இந்த விவகாரத்தால் அந்த பள்ளியில் பதற்றமான சூழல் நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொது கல்வி துணை இயக்குனர் அந்த பள்ளிக்கு நேரில் சென்றார். போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றப்பட வேண்டும் என்று எடுத்து கூறினார்.

பரபரப்பான சூழல்

  மேலும் அந்த பெற்றோர், ஆசிரியை மீது கூறிய புகார் குறித்து விசாரிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்த ஹிஜாப் விவகாரத்தில் பெற்றோர் போராட்டம் நடத்தியதால் அந்த பள்ளியில் பரபரப்பான சூழல் நிலவியது. உடுப்பி, சிவமொக்கா, தாவணகெரே உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஏற்பட்டு வந்த இந்த ஹிஜாப் விவகாரம் தற்போது தலைநகர் பெங்களூருவுக்குள்ளும் நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியை பணி இடைநீக்கம்

அந்த பள்ளியில் கரும்பலகையில் ஹிஜாப் குறித்து தவறான கருத்தை அந்த ஆசிரியை எழுதியதாக மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டினர். இதையடுத்து அந்த ஆசிரியை பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை அந்த தனியார் பள்ளி நிர்வாகம் பிறப்பித்தது. இதுகுறித்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரின் தந்தை சாகபுதீன் கூறுகையில், ‘‘இந்த தனியார் பள்ளியில் இந்து மற்றும் முஸ்லிம் மாணவர்கள் ஒற்றுமையாக படிக்கிறார்கள். இங்கு படிப்பவர்களில் 80 சதவீதம் பேர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள். இங்கு ஹிஜாப் பிரச்சினை இல்லை’’ என்றார்.

Next Story