தேவூர் அருகே, மயிலம்பட்டி பகுதியில் நள்ளிரவில் நிலா பிள்ளையார் வழிபாடு
தேவூர் அருகே மயிலம்பட்டி பகுதியில் தை கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று கிராம மக்கள் ஒன்று கூடி நள்ளிரவு 12 மணியளவில் நிலா பிள்ளையார் வழிபாடு செய்தனர்.
தேவூர்:
தேவூர் அருகே மயிலம்பட்டி பகுதியில் தை கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று கிராம மக்கள் ஒன்று கூடி நள்ளிரவு 12 மணியளவில் நிலா பிள்ளையார் வழிபாடு செய்தனர்.
நிலா பிள்ளையார் வழிபாடு
சேலம் மாவட்டம் தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆண்டுதோறும் தைப்பொங்கல் பண்டிகையையொட்டி நிலா பிள்ளையார் வழிபாடு நடத்துவது வழக்கம். அதாவது விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை, அரைத்து பொங்கல் பண்டிகை அன்று ஊர் கூடி பச்சரிசி பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.
இந்த வழிபாட்டின் சிகர நிகழ்ச்சியாக, கிராமப்புற பெண்கள் ஒன்றுகூடி கிராமிய கும்மி பாட்டு பாடிக்கொண்டு நடுவில் நிலா பிள்ளையாக சிறுவர்-சிறுமிகள் நிற்கவைத்து அவர்களை சுற்றி மேலும், கீழுமாக கைகளை தட்டியவாறு வட்டமாக நடந்துகொண்டே கும்மி பாட்டு பாடி வருவது வழக்கமாகும்.
இந்த ஆண்டு கடந்த தைப்பொங்கல் பண்டிகை காலத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் நிலா பிள்ளையார் வழிபாடு நடத்தப்படவில்லை.
கும்மிப்பாட்டு
அதே நேரத்தில் தற்போது தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து உள்ளதால் கடந்த ஒரு வாரகாலமாக மயிலம்பட்டி கிராம மக்கள் இரவு நேரங்களில் ஒன்றாக கூடி கும்மிப்பாட்டு பாடி வழிபாடு செய்து வந்தனர். இந்த ்நிலையில் நேற்று தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் நிலா பிள்ளையார் வழிபாடு செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று இரவு 7 மணி முதல் மயிலம்பட்டி கிராமத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகள், பெண்கள், ஆண்கள் என பொதுமக்கள் ஒன்றாக கூடி மாவிளக்கு தட்டு எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்குள்ள கோவிலில் படையலிட்டு பின்பு நிலவாக சிறுவர்-சிறுமிகளை நடுவில் நிற்க வைத்து பெண்கள் வட்டமாக ஒன்று கூடி கிராமிய பாடல் பாடி கைகளை மேலும் கீழும் தட்டியவாறு வட்டமாக நடந்து கும்மி அடித்தனர்.
கற்சிலைக்கு வழிபாடு
இதையடுத்து அந்த பகுதியில் நிலாவாக வைக்கப்பட்ட கற்சிலைக்கு பொங்கல் படையலிட்டு சிறுவர், சிறுமிகளை கற்சிலையின் முன்பாக நிற்க வைத்து அவர்களை நிலாவாக கருதி அவர்களுக்கு பொங்கல் கொடுத்து பின்னர் வழிபாடு செய்தனர்.
தேவூர் அருகே மயிலம்பட்டி பகுதியில் காலங்காலமாக தைப்பொங்கலையொட்டி சிறுவர், சிறுமிகளை நிலவாக கருதி வழிபடும் வழக்கம் இன்றளவும் பழமை மாறாமல் நிலா பிள்ளையார் வழிபாடு என்ற பெயரில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story