சேலம் மாவட்டத்தில், 11 மையங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இணையவழி தேர்வு தொடங்கியது-முதல் நாளில் 2,451 பேர் பங்கேற்பு
சேலம் மாவட்டத்தில் 11 மையங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான இணையவழி தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் 2 ஆயிரத்து 451 பேர் பங்கேற்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் 11 மையங்களில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான இணையவழி தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் 2 ஆயிரத்து 451 பேர் பங்கேற்றனர்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1, கணினி பயிற்றுனர்கள் நிலை-1 ஆகியவற்றை நிரப்புவதற்கு இணையவழி மூலம் தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்காக இணையதளம் முலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த நிலையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு இணையவழி மூலம் நேற்று தொடங்கியது. விண்ணப்பித்த தேர்வர்களின் எண்ணிக்கை அடிப்படையில் காலை, மதியம் என இரு வேளைகளில் தேர்வு நடத்தப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் 11 கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.
2,451 பேர் பங்கேற்றனர்
இந்த தேர்வில் கலந்து கொள்வதற்காக விண்ணப்பதாரர்கள் ஏராளமானவர்கள் தேர்வு மையங்களுக்கு வந்தனர். பின்னர் விண்ணப்பதாரர்களை தவிர வேறு யாரையும் மையங்களுக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. மேலும் தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டன.
காலை, மதியம் நடந்த தேர்வுகளில் மொத்தம் 2 ஆயிரத்து 451 பேர் பங்கேற்றனர். 488 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இந்த தேர்வு வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story