சென்னை மாநகராட்சி தேர்தல்: பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி


சென்னை மாநகராட்சி தேர்தல்: பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 13 Feb 2022 7:05 AM IST (Updated: 13 Feb 2022 7:05 AM IST)
t-max-icont-min-icon

பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தல் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிக்க ரிப்பன் மாளிகையில் நேற்று நுண் பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையிடமான ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்டரங்களில் நேற்று நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்புக்கு பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி தலைமை தாங்கினார்.

இந்த பயிற்சி வகுப்பில் மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் வி.தட்சிணாமூர்த்தி, டி.மணிகண்டன் கூடுதல் தேர்தல் அதிகாரிகள் விஷூ மஹாஜன், டி.சினேகா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்புக்கு பின்னர் மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-

மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி சென்னையில் உள்ள 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடிகளில் போலீசாருடன் இணைந்து 1,139 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் சென்னையில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவுகள் முறையாக நடைபெறுகிறதா? உள்ளிட்டவைகளை கண்காணிக்க 334 நுண் பணியாளர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள 5 ஆயிரத்து 794 வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை அனைத்து கட்டுப்பாட்டு அறைகளிலும் இருந்து நேரலையாக கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தபால் வாக்குகள் சரியான நேரத்தில் சென்றடைய வேண்டும் என வாக்கு சீட்டுகள் தபால் மூலம் அந்தந்த தேர்தல் பணியாளர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய 44 பேர் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்கு முன்பே தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள அந்த பகுதி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிடம் அனுமதி வாங்க வேண்டும் என வேட்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. மாநில தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி வாக்குப்பதிவு எந்திரத்தில் ‘நோட்டா’ இடம்பெறாது. அடுத்த 3 நாட்களுக்கு ‘பூத் சிலிப்’ வழங்கும் பணி நடைபெறும். இந்த பணிக்காக 5 ஆயிரம் மாநகராட்சி ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story