தச்சூர்-சித்தூர் இடையே 6 வழிச்சாலையை மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும்: விவசாயிகள் சங்க மாநில தலைவர் கோரிக்கை
தச்சூர்-சித்தூர் இடையே அமைக்கப்பட்டு வரும் 6 வழிச்சாலையை மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழு மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் கோரிக்கை வைத்துள்ளார்.
6 வழிச்சாலை
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3,200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சாலை கண்ணிகைபேர், பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக சித்தூர் வரை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் சுமார் 700 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள விளைநிலங்கள், கோவில்கள், அரசுப் பள்ளி கட்டிடங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தங்கள் கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமைக்க கூடாது என்று கிராம பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் அதிகாரிகள் தொடர்ந்து சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாய சங்க கூட்டம்
இந்த நிலையில் ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் ஆஞ்சநேயா தலைமை தாங்கினார். இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசியதாவது:-
விவசாயிகளின் நலன் கருதி தற்போது நடைப்பெற்று வரும் 6 வழிச்சாலையை மாற்றுப் பாதையில் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதேபோல் விவசாயிகளை பாதுகாக்க உரிய விலையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். உரத்தட்டுப்பாடுகள் ஏற்படாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பி.ஆர். பாண்டியன் பேசினார்.
இந்த கூட்டத்தில் விவசாய சங்க சென்னை மண்டல தலைவர் துரைசாமி, செயலாளர் சிவா, துணைத்தலைவர் வெங்கடாத்ரி, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செந்தில்வேலன் எல்லாபுரம் ஒன்றிய தலைவர் சுரேஷ்பாபு, வக்கீல் மதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story