நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் நடந்தது.
உள்ளாட்சி தேர்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, திருச்செந்தூர் மற்றும் காயல்பட்டினம் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இந்த தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கு 319 வாக்குப்பதிவு மையங்களிலும், கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளுக்கு 85 வாக்குப்பதிவு மையங்களிலும், திருச்செந்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளுக்கு 32 வாக்குப்பதிவு மையங்களிலும், காயல்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளுக்கு 40 வாக்குப்பதிவு மையங்களிலும், 17 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 261 வார்டுகளுக்கு 268 வாக்குப்பதிவு மையங்கள் ஆக மொத்தம் 402 வார்டுகளுக்கு 744 வாக்குப்பதிவு மையங்களில் வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.
2,500 போலீசார்
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சைபர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மேற்பார்வையில், தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கணேஷ், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சம்பத், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஜெயராஜ் ஆகியோரின் தலைமையிலும் பாதுகாப்பு ஏற்பாடகள் செய்யப்பட்டு உள்ளன.
கோவில்பட்டி நகராட்சி, கயத்தாறு மற்றும் கழுகுமலை பேரூராட்சிகளுக்கு தூத்துக்குடி தலைமையிட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உதயசூரியன்(கோவில்பட்டி), சங்கர் (மணியாச்சி), பிரேமானந்தன் (மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவு) ஆகியோரின் தலைமையிலும், காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் ஆறுமுகநேரி, ஆத்தூர், உடன்குடி, சாத்தான்குளம், நாசரேத், ஆழ்வார்திருநகரி, தென்திருப்பேரை, கானம், ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம், சாயர்புரம் மற்றும் ஏரல் ஆகிய பேரூராட்சிகளுக்கு தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபி மேற்பார்வையில், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் வெங்கடேசன் (ஸ்ரீவைகுண்டம்), ராஜூ (சாத்தான்குளம்), கண்ணபிரான் (ஆயுதப்படை), ஜெயராம் (மாவட்ட குற்றப்பிரிவு), பாலாஜி (மதுவிலக்கு பிரிவு) ஆகியோர் தலைமையிலும், விளாத்திகுளம், எட்டயபுரம் மற்றும் புதூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த தேர்தலில் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு சிறப்பு காவல்படையினர் உள்பட 2 ஆயிரத்து 500 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர், என்று கூறினார்.
பரிசு
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் நடைபெறக்கூடிய திருவிழாக்கள், முக்கிய சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும், ரவுடிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய போலீசார் பரிசு வழங்கி பாராட்டப்பட்டனர். கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story