‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெரு பெயரை மறைக்கும் குப்பைத்தொட்டிகள்
சென்னை மாதவரம் பால் பண்ணை போலீஸ் நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் சாலை பெயர் பலகையை மறைத்து குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. மாதவரம் மண்டலத்தில் தூய்மை பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவன அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஞானமணி பால்ராஜ், மாதவரம்.
இன்னும் கிடைக்கல...
சென்னை வேளச்சேரி ஒராண்டியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள ரேஷன் கடையில் (எண்- 02LC108SC) தமிழக அரசின் பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேஷ்டி, சேலை இன்னும் தரவில்லை. ஊழியர்களிடம் கேட்டால், குறைந்த அளவில்தான் வந்துள்ளது என்று கைவிரித்துவிட்டார்கள்.
- பொதுமக்கள்.
வாகன ஓட்டிகள் சிரமம்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ள 60 அடி மெயின் ரோடும், தீயணைப்பு அலுவலக மெயின் ரோடும் இணையும் இடத்திலும், எதிர்புறத்திலும் நீளமான பள்ளம் உள்ளது. பள்ளிக்கூடத்துக்கு சைக்கிளில் செல்லும் மாணவ-மாணவிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். சில சமயங்களில் மாணவர்கள் கீழே விழுந்து விடுகின்றனர். எனவே இந்த சாலையை செப்பனிட்டு தர வேண்டும்.
- ஏ.தரணிதரன், சமூக ஆர்வலர்.
போக்குவரத்து போலீசார் கவனத்துக்கு...
செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் கூட் ரோட்டில் நேர கட்டுப்பாடு இன்றி கனரக வாகனங்கள் செல்கின்றன. காலை வேளையில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், அலுவலகம் செல்வோர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சிரமம் அடையும் நிலை உள்ளது. எனவே இந்த சாலையில் காலை 8 மணி முதல் காலை 10 மணி வரை கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று போக்குவரத்து போலீஸ் உயர் அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.
- பொதுமக்கள்.
பாழ்படும் ஏரி
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் உள்ள சுந்தர சோழபுரம் இணைப்பு சாலையையொட்டி உள்ள ஏரியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. கழிவுநீர் வாகனங்களும் கழிவுநீரை இந்த ஏரியில் விடுகின்றன. எனவே இந்த ஏரி பாழ்பட்டு வருகிறது. மேலும் இந்த பகுதியில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அதிகளவில் நடக்கின்றன. இந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
- செல்வகுமார், சக்தி நகர்.
தெரு பெயரை காணோம்
சென்னை அமைந்தகரை ஹால்ஸ் சாலை அருகே உள்ள அம்மா உணவகம் பின்புறம் ராணி அண்ணாநகர் உள்ளது. இந்த இடத்தின் பெயர் பலகையின் போர்ட்டு மட்டும் இருக்கிறது. பெயர் இல்லை. சுவற்றில் எழுதப்பட்டுள்ள பெயரும் மங்களாகி வருகிறது. எனவே காட்சி பொருளாக இருக்கும் போர்ட்டில் பெயரை அச்சிட்டு வைக்க வேண்டும் என்று மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கிறோம்.
- சாஜித் பாட்ஷா, அமைந்தகரை.
முறையற்ற மின் இணைப்பு
சென்னை பெரம்பூர் பி.பி. மெயின் ரோடு 4-வது தெருவில் உள்ள மின் இணைப்பு பெட்டியில் இருந்து ஆபத்தான முறையில் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
- பார்வதி, பெரம்பூர்.
சமுதாய நலக்கூடம் திறக்கப்படுமா?
சென்னை மணலி புதுநகர் பைபாஸ் பஸ் நிறுத்தம் அருகே ஏழை-எளிய குடும்பத்தினரின் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு வசதியாக தனியார் நிறுவனம் பங்களிப்புடன் சமுதாய வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் பாழ்பட்டு கிடக்கிறது. இந்த கட்டிடத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் மீண்டும் திறக்க வேண்டும்.
- பா.பொன்னுதுரை, மணலி புதுநகர்.
புதிய சாலை போடப்படுமா?
சென்னை ராமாபுரம் பஜனை கோவில் தெருவில் உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. குண்டும், குழியுமாகவும், மேடு-பள்ளமாகவும் இருப்பதால் மிகுந்த சிரமத்துக்கு இடையே பயணிக்கும் நிலைமை உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
- பிரியா தியாகராஜன், ராமாபுரம்.
மாடு-தெரு நாய்கள் தொல்லை
காஞ்சீபுரம் மாவட்டம் வனிகர் தெரு பவாஜி நகர், திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு, பெருமாள்பட்டு, பத்மாவதி நகர், சென்னை அம்பத்தூர் லெனின் நகர் 3-வது பிரதான சாலை மற்றும் குறுக்கு சாலைகள் ஆகிய இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகம் இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர், சென்னை ஐஸ்அவுஸ் மசூதி மெயின் ரோடு ஆகிய இடங்களில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் உலா வருகின்றன.
- பொதுமக்கள்.
பஸ் பயணிகள் கோரிக்கை
ஆவடியில் இருந்து திருவேற்காடு வரை இயக்கப்படும் எஸ்-52 வழித்தட சிற்றுந்தை செட்டியார் அகரம் வழியாக போரூர் வரை நீட்டிக்க வேண்டும். ‘71 ஈ’ வழித்தட மாநகர பஸ் மேம்பால பணியால் பட்டாபிராமோடு நிறுத்தப்படுகிறது. மற்ற பஸ்களை போன்று இந்த பஸ்சையும் நெமிலிச்சேரி பைபாஸ் வழியாக திருப்பி விட வேண்டும். கோயம்பேட்டில் இருந்து மூலக்கடை வழியாக பார்வதி நகருக்கு பஸ் இயக்கிட வேண்டும்.
- பயணிகள்.
Related Tags :
Next Story