திண்டுக்கல்லில் அ.தி.மு.க. வேட்பாளர் வைத்த பேனரை கிழித்து அரசியல் கட்சியினரையும் போலீசாரையும் அலற வைத்த தெருநாய்கள்


திண்டுக்கல்லில் அ.தி.மு.க. வேட்பாளர் வைத்த பேனரை கிழித்து அரசியல் கட்சியினரையும் போலீசாரையும் அலற வைத்த தெருநாய்கள்
x
தினத்தந்தி 13 Feb 2022 9:17 PM IST (Updated: 13 Feb 2022 9:18 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில், அ.தி.மு.க. வேட்பாளர் வைத்த பேனரை கிழித்து அரசியல் கட்சியினரையும், போலீசாரையும் தெருநாய்கள் அலற வைத்த சம்பவம் அரங்கேறியது.

திண்டுக்கல்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திண்டுக்கல்லில் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தாங்கள் போட்டியிடும் வார்டு பகுதியில் வேட்பாளர்கள் பேனர்களையும் வைத்துள்ளனர். 
அந்த வகையில், திண்டுக்கல் மாநகராட்சி 32-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து, அனுமந்தநகர் ரெயில்வே மேம்பாலம் அருகே பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலையில், அ.தி.மு.க.வினர் பிரசாரத்துக்காக அந்த பகுதிக்கு சென்றனர். அப்போது வேட்பாளரை ஆதரித்து வைக்கப்பட்டிருந்த பேனர் தாறுமாறாக கிழிக்கப்பட்டிருந்தது. 
அ.தி.மு.க.வினர் ஆவேசம்
இதைப்பார்த்த அ.தி.மு.க.வினர் ஆவேசமடைந்தனர். தங்கள் வேட்பாளரை அவமதிக்கும் பொருட்டு பிற கட்சியினரோ அல்லது மர்ம நபர்களோ தான் அந்த பேனரை கிழித்தனர் என்று அவர்கள் நினைத்தனர். 
இதுகுறித்து உடனடியாக திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க.வினர் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இதற்கிடையே அ.தி.மு.க. பேனர் கிழிக்கப்பட்ட சம்பவம் காட்டுத்தீ போல பரவியது.
தேர்தல் போட்டி காரணமாக பேனர் கிழிக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசாரும், அ.தி.மு.க.வினரும் கருதினர். அந்த கோணத்தில், போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டது.
கண்காணிப்பு கேமரா 
பேனர் கிழிப்பு சம்பவத்தால் அரசியல் கட்சியினரிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதனால் பரபரப்பும், பதற்றமும் தொற்றிக்கொண்டது. பேனரை கிழித்தவர்கள் யார்? என்று கண்டுபிடிக்கும் வகையில் விசாரணையை போலீசார் துரிதப்படுத்தினர்.
இதற்கிடையே போலீசாரின் 3-வது கண் என்று கருதப்படும் கண்காணிப்பு கேமராக்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்தனர். நல்லவேளையாக, அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தது. 
இதைப்பார்த்த போலீசார், குற்றவாளிகளை விரைந்து பிடித்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம் என்ற மகிழ்ச்சி அடைந்தனர். இதனையடுத்து கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
தெருநாய்கள் அட்டூழியம்
அப்போது நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள், அ.தி.மு.க. வேட்பாளரின் பேனரை கிழித்த காட்சி பதிவாகி இருந்தது. பேனர் கிழிப்புக்கு தெருநாய்கள் தான் காரணம் என்பதை கண்காணிப்பு கேமரா காட்டிக்கொடுத்தது.
அதன் பின்னரே போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பின்னர் அ.தி.மு.க.வினரை அழைத்து அந்த காட்சிகளை போலீசார் காண்பித்தனர். அதனை பார்த்த பிறகு தான் அ.தி.மு.க.வினரின் ஆவேசம் தணிந்தது. அதையடுத்து புகாரை திரும்ப பெறுவதாக அவர்கள் போலீசாரிடம் கூறிச்சென்றனர்.
தேர்தல் நேரத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வாடிக்கை தான். அப்போதெல்லாம் அரசியல் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும்.
ஆனால் திண்டுக்கல்லில் அரசியல் கட்சியினரையும், போலீசாரையும் அலற விட்டது தெருநாய்கள் தான் என்பதை காட்டிக்கொடுத்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது கண்காணிப்பு  கேமரா என்றால் அது மிகையல்ல.

Next Story