பிரசாரங்களுக்கு அனுமதியின்றி பயன்படுத்தப்படும் ஒலிப்பெருக்கிகள் பறிமுதல் செய்யப்படும்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 13 Feb 2022 10:32 PM IST (Updated: 13 Feb 2022 10:32 PM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரங்களுக்கு அனுமதியின்றி பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகள் பறிமுதல் செய்யப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

கரூர்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான பிரபுசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- கரூர் மாவட்டத்தில், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரங்களுக்கு 3 சக்கரவாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் ஒலிபெருக்கியுடன் கூடிய வாகனங்களை பயன்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரங்களுக்காக எந்தவொரு வகை வாகனங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளை காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களுக்கு அல்லது ஊர்வலங்களுக்கு நிலையான குழல் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தவேண்டுமாயின் காவல்துறை அலுவலரின் எழுத்து மூலமான முன் அனுமதி பெறவேண்டும். திட்டவட்டமான முன் அனுமதி அளிக்கையில், பொதுஅமைதிக்கு இடையூறு ஏற்படாதவாறும் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவிற்குள் எந்நேரத்திற்குள் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகின்றதோ? அந்த நேரத்திற்குள் மட்டுமே பயன் படுத்திடவேண்டும்.
ஒலிப்பெருக்கிகள் அனுமதி
வரையறுக்கப்பட்ட நேரங்களுக்கு பிறகும் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரி களின் எழுத்து மூலமான அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிப்பெருக்கிகளும், அதனைப் பயன்படுத்துவதற்கு தொடர்புடைய அனைத்து கருவிகளுடன் பறிமுதல் செய்யப்பட வேண்டும். டிரக்குகள், டெம்போக்கள், கார்கள், வாடகை கார்கள், வேன்கள், 3 சக்கரவண்டிகள், ஸ்கூட்டர்கள், சைக்கிள் ரிக்ஷாக்கள் முதலியன உள்பட வரையறுக்கப்படாத நடமாடும் வண்டிகளில் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், வேறுநபர்கள், ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதி கேட்டு அளிக்கப்படும் விண்ணப்பங்களில் அந்த வாகனங்களின் பதிவு எண்களை, வாகன அடையாள விவரங்களையும் (வாகனத்தின் பெயர், பிறஅடையாளம்) தவறாமல் குறிப்பிடவேண்டும்.
வாகனங்களின் பதிவெண்கள்
நடமாடும் வண்டிகளிலோ அல்லது நிலையான இடத்திலோ ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், மற்றவர்கள் அதுகுறித்து அந்த உள்ளாட்சியின் தேர்தல் நடத்தும் அதிகாரியிடமும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளிடமும் அந்த ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துவதற்கு முன்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பெறப்பட்ட அனுமதிகளின் முழுவிவரங்களை எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும்.
 நடமாடும் ஒலிப்பெருக்கிகளை பொருத்தவரையில் அவை பொருத்தப்பட்ட வாகனங்களின் பதிவெண்கள், அடையாள எண்களை தேர்தல் நடத்தும் அதிகாரியிடமும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளிடமும் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த ஆணைகளை மீறி எவரும் எந்த ஒலிப்பெருக்கிகளையும் பயன்படுத்தாமல் இருப்பதை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டுமாறு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரின் முழு பொறுப்பாகும். மேலும், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் கடந்த 9-ந்தேதி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தேர்தல் பிரசாரங்களுக்கு ஒலிப்பெருக்கிகளை வாகனங்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் பயன்படுத்தும் வாகனங்கள் அனுமதி பெறுவது தொடர்பான கூடுதல் தெளிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள்...
இதில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் தொடர்பான தேர்தல் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படும் மூன்று சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் ஒலிப்பெருக்கிகளுடன் கூடிய வாகனங்களைப் பயன்படுத்தும் அனைத்து அரசியல்கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், வாகனங்களைப் பயன்படுத்துவதற்கான அனுமதியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் அனுமதிக் கடிதத்துடன் மாவட்டதேர்தல்அலுவலரும், மாவட்ட கலெக்டரின் அனுமதி பெறப்படவேண்டும். 
தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களின் தேர்தல் பிரசார வாகனங்களுக்கான முன் அனுமதி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபரப்படி தேர்தல் பிரசார வாகனங்கள் மற்றும் ஒலிப்பெருக்கியுடன் கூடிய வாகனங்களுக்கு காவல்துறையின் அனுமதி அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான போலீஸ் துணை சூப்பிரண்டுகளாலும், மாவட்ட தேர்தல் அலுவலரின் அனுமதி அந்தந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வருவாய் கோட்டாட்சியரால் வழங்கப்படும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story