வேலைவாய்ப்பற்றோர் சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்க காலஅவகாசம்


வேலைவாய்ப்பற்றோர் சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்க காலஅவகாசம்
x
தினத்தந்தி 13 Feb 2022 10:46 PM IST (Updated: 13 Feb 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உதவித்தொகை பெறுபவர்களில் சுயஉறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை, 
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் உதவித்தொகை பெறுபவர்களில் சுயஉறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
உதவித்தொகை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 
இந்த திட்டத்தில் ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித் தொகை பெற நாளது தேதி வரை வங்கிகளில் குறிப்புகள் இடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தக நகலுடன் சுயஉறுதி மொழி ஆவணத்தை பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கொடுக்க வேண்டும்.
மேலும், கடந்த ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரையுள்ள காலாண்டுகளுக்கு சுயஉறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க தவறியவர்களும், தற்போது தமிழகஅரசு வழங்கியுள்ள சிறப்பு சலுகையின்படி நடப்பு காலாண்டில் 1.1.2022 முதல் 31.3.2022 வரை இந்த அலுவலகத்தில் நேரில் வந்தோ அல்லது தபால் மூலமாகவோ தங்களது சுயஉறுதிமொழி ஆவணத்தை வழங்கலாம்.
பதிவு ரத்து
 மேலும் உதவித்தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது எனவும் உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு பரிந்துரைத் தலுக்கு எவ்வித தடையும் ஏற்படாது.
இந்த திட்டத்தில் முறையாக பள்ளியில் படித்து 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு
மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 
இந்த தொகை நேரடியாக மனுதாரர்களது வங்கி கணக்கில் காலாண்டுக்கு ஒரு முறை வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகா மலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பம்
மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங் களுக்கு சென்று படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம்.
இந்த உதவித்தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவர்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்திற்கு அனைத்து கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் அனைத்து வேலை நாட்களிலும் வருடம் முழுவதும் வழங்கப்படும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story