பழமையான கோவில் சிலை சேதம்
போடியில் பழமையான கோவில் சிலையை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி அப்பகுதி மக்கள் மறியலிலில் ஈடுபட்டனர்.
போடி:
போடியில் போஜன் பூங்கா பஸ் நிறுத்தம் அருகே கண்கொடுத்த ராசி நாயக்கர் கோவில் உள்ளது. பல ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலில் உள்ள ராசி நாயக்கர் சிலையை மர்ம நபர் சேதப்படுத்தி விட்டு தப்பி சென்றார். இதுகுறித்து போடி நகர் போலீசில், போடி ஜமீன்தார் வடமலைமுத்து ராஜய பாண்டியன் புகார் கொடுத்தார்.
இந்த நிலையில் நேற்று சிலையை சேதப்படுத்தியவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கக்கோரி போடி, கரட்டுபட்டி, சூலப்புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் கோவில் முன்பு திரண்டனர். அவர்கள் போடி-தேனி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த போடி போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) அண்ணாத்துரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு போடி ஜமீன்தார் வடமலை முத்து ராஜய பாண்டியன் வந்தார். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த சிலையை சேதப்படுத்திய தொடர்பாக போடி நடுத்தெருவை சேர்ந்த ராணுவ வீரரான கார்த்திக் (வயது 37) என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story