தி.மு.க. பிரமுகரின் பாத்திரக் கடையில் இருந்த 150 அரிசி மூட்டைகள்
கள்ளக்குறிச்சியில் உள்ள தி.மு.க. பிரமுகரின் பாத்திரக்கடையில் 150 அரிசி மூட்டைகள் இருந்தது தொடர்பாக பறக்கும் படையினரிடம் அ.தி.மு.க.வினர் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வார்டுகளில் உள்ள கவுன்சிலர் பதவிகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க 3 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் தீவிர ரோந்து பணியில் இருந்து வருகிறார்கள்.
150 அரிசி மூட்டைகள்
இந்த நிலையில் 11-வது வார்டுக்குட்பட்ட குளத்து மேட்டுத்தெருவில் உள்ள தி.மு.க. பிரமுகர் ஒருவரின் பாத்திரக்கடையில் 25 கிலோ எடை கொண்ட 150 அரிசி மூட்டைகள் அடுக்கி வைத்திருந்ததைப் பார்த்து சந்தேகம் அடைந்த அ.தி.மு.க.வினர் இதுபற்றி தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் பறக்கும் படை அலுவலர் ஆறுமுகம் தலைமையில் குழுவினர் குறிப்பிட்ட பாத்திரக்கடைக்கு விரைந்து வந்து கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அப்போது விற்பனைக்காக அரிசி மூட்டைகளை கொள்முதல் செய்து வைத்துள்ளோம் என்று கூறி அதற்கான ரசீதை பறக்கும் படை அலுவலரிடம் காண்பித்தார்.
அ.தி.மு.க.வினர் வாக்குவாதம்
ஆனால் அங்கு வந்த அ.தி.மு.க. வினர் பாத்திரக்கடையில் எதற்கு திடீரென அரிசி மூட்டைகளை வைத்திருக்கலாம் என்று கூறி பறக்கும்படையினரிடம் வாக்குவாதம் செய்தனர். அதற்கு அரிசி மூட்டைகளை கொள் முதல் செய்ததற்கான ரசீது வைத்துள்ளார்கள் என்று பறக்கும் படை அதிகாரி கூறினார். ஆனால் அதை ஏற்க மறுத்து அ.தி.மு.க.வினர் தொடர்ந்து வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க கடையை மூடும்படி அதன் உரிமையாளரிடம் பறக்கும் படையினர் கூறினர். உடனே அவரும் கடையை மூடி விட்டு அங்கிருந்து சென்றார்.
பரபரப்பு
அரிசி மூட்டைகள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததா? என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story