வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஓரிருநாளில் முடிக்க வேண்டும். தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தல்


வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஓரிருநாளில் முடிக்க வேண்டும். தேர்தல் பார்வையாளர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 13 Feb 2022 11:59 PM IST (Updated: 13 Feb 2022 11:59 PM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஓரிருநாளில் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதாப் கூறினார்

வேலூர்

வாக்குச்சாவடி மையங்களில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஓரிருநாளில் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதாப் கூறினார்.

தேர்தல் பார்வையாளர் ஆய்வு

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள், ஒடுகத்தூர், பென்னாத்தூர், பள்ளிகொண்டா, திருவலம் பேரூராட்சிகளுக்கு வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 628 வாக்குச்சாவடிகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. இங்கு மின்சாரம், கழிப்பறை, சாய்தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வேலூர் அலமேலுமங்காபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதாப் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள 4 வாக்குச்சாவடிகளில் மின்சார வசதி, சாய்தள வசதி மற்றும் கட்டிட அமைப்பு உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். அப்போது மின்இணைப்புகள் அனைத்தும் சரியாக இயங்குகிறதா என்று வாக்குப்பதிவுக்கு முன்பாக சரிபார்த்து கொள்ள வேண்டும். கண்காணிப்பு மற்றும் வெப் கேமராக்கள் பொருத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிக்குள் மூன்று சக்கர நாற்காலியில் சென்று வாக்களிக்க சாய்தள வசதி அமைக்க வேண்டும். மேலும் இப்பணிகள் அனைத்தையும் ஓரிருநாளில் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அடிப்படை வசதிகள்

ஆய்வுக்கு பின்னர் பிரதாப் நிருபர்களிடம் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் தேர்தல் சமயத்தில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படவில்லை. தற்போது 91 வாக்குச்சாவடிகள் பதற்றமானவைகளாக கண்டறியப்பட்டுள்ளன. தேர்தல் பிரசாரத்தின்போது ஏதேனும் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அந்த பகுதி பதற்றமானவைகளாக கண்டறியப்படுமா?, பதற்றமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்குமா? என்பது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு, தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் ஆய்வு செய்து அறிக்கை வழங்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் இறுதியாக பதற்றமான வாக்குச்சாவடிகளின் முழுவிபரம் தெரிய வரும். வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகளில் சிறு குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றை ஒரிருநாளில் சரி செய்யும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சிறப்பாக நடைபெற அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
ஆய்வின்போது வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், இளநிலை பொறியாளர் மதிவாணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story