வேலூர் மாநகராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக பூத் சிலிப் வினியோகம்


வேலூர் மாநகராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக பூத் சிலிப் வினியோகம்
x
தினத்தந்தி 14 Feb 2022 12:00 AM IST (Updated: 14 Feb 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாநகராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக பூத்சிலிப் வினியோகம் செய்யும் பணியில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வேலூர்

வேலூர் மாநகராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக  பூத்சிலிப் வினியோகம் செய்யும் பணியில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மாநகராட்சி தேர்தல்

வேலூர் மாநகராட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. வாக்குப்பதிவிற்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வேலூர் மாநகராட்சியில் உள்ள 58 வார்டுகளுக்கு தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 354 பேர் போட்டியிடுகிறார்கள்.

2 தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சி தேர்தலில் 3,95,700 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அதற்காக 419 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் மின்சாரம், குடிநீர், சாய்தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பூத்சிலிப் வினியோகம்

இந்த நிலையில் வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு வீடு, வீடாக பூத்சிலிப் வினியோகம் செய்யும் பணி நேற்று தொடங்கியது. வேலூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பிரதாப், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், உதவிகமிஷனர் பிரபுகுமார் ஜோசப் ஆகியோர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு பூத்சிலிப் வழங்கி, அதற்கான கையொப்பம் பெற்றனர். வாக்காளர்களின் வார்டு, வரிசை எண் உள்ளிட்ட விபரங்களுடன் தயாரான பூத்சிலிப் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு, வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் வழங்கப்பட்டன. அவற்றை வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் ஒவ்வொரு பகுதியிலும் வீடு, வீடாக சென்று வாக்காளர்களிடம் வழங்கி வருகிறார்கள்.

வாக்காளர் அடையாள அட்டை

இதுகுறித்து வேலூர் மாநகராட்சி தேர்தல்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாநகராட்சி பகுதியில் வாக்காளர்களுக்கு பூத்சிலிப் வழங்கும் பணியில் 150-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வாக்காளர்களின் வீட்டிற்கு நேரில் சென்று பூத்சிலிப் வழங்குகிறார்கள். பூத்சிலிப் வழங்கும் சமயத்தில் வீட்டில் இல்லாதவர்கள், வெளியூர் சென்றவர்கள் வாக்குப்பதிவு தினத்தில் கூட அதனை பெற்று கொள்ளலாம். வாக்குச்சாவடியின் அருகே இருக்கும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் பூத் சிலிப்பை பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பூத்சிலிப்பில் வாக்காளரின் புகைப்படம் இடம் பெற்றிருக்காது. எனவே பூத்சிலிப்பை மட்டும் வாக்குச்சாவடிக்கு கொண்டு சென்று வாக்காளர்கள் வாக்களிக்க இயலாது. பூத்சிலிப் உடன் வாக்காளர் அடையாள அட்டை எடுத்து செல்ல வேண்டும். வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் ஆதார் அட்டை உள்பட 11 வகையான ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்கலாம். வாக்களிக்க பூத்சிலிப் கட்டாயம் கிடையாது என்று தெரிவித்தனர்.

Next Story