கொப்பரை தேங்காயை அரசு கொள்முதல் செய்ய முடிவு-கலெக்டர் தகவல்


கொப்பரை தேங்காயை அரசு கொள்முதல் செய்ய முடிவு-கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 14 Feb 2022 12:04 AM IST (Updated: 14 Feb 2022 12:04 AM IST)
t-max-icont-min-icon

கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக மாவட்ட கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை, 
கொப்பரை தேங்காய்
தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி அதிகரிக்கவும், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது கொப்பரை தேங்காய் விலை குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் விலை ஆதரவு திட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆலங்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 550 மெட்ரிக் டன் அரவை கொப்பரையும், அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் மூலம் 550 மெட்ரிக் டன் அரவை கொப்பரையும் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
வங்கி கணக்கில் செலுத்தப்படும்
மத்திய அரசினால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.105.90 என்ற விலையில் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்படும். கொப்பரை கொள்முதல் கடந்த 2-ந் தேதி முதல் வருகிற ஜூலை மாதம் 31-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும். இத்திட்டத்தில் விவசாயிகள் பயனடைய ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தினை அணுகி தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும். 
விவசாயிகளின் கொப்பரைக்கான தொகை நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். மத்திய அரசின் கொள்முதல் நிறுவனம் குறைந்தபட்ச தரத்தினை பரிந்துரைத்துள்ளது. அதன்படி அரவை கொப்பரையின் குறைந்தபட்ச தரம், அயல்பொருட்கள் (1 சதவீதம்) பூஞ்சானம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீதம் (100 எண்களுக்கு), சுருக்கம் கொண்ட கொப்பரை 10 சதவீதம் (100 பருப்பிலான எண்ணிக்கையில்), சில்லுகள் உடைபாடு 10 சதவீதம் (எடையில்), ஈரப்பதம் 6 சதவீதம் கொண்டதாக இருக்க வேண்டும். 
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் நலனுக்காக மேற்கொண்டுள்ள இந்த கொப்பரை கொள்முதல் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட தென்னை விவசாயிகள் அதிகளவில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story