பெண் இன்ஸ்பெக்டர் வருமானத்துக்கு அதிகமாக 171 சதவீதம் சொத்துக்கள் சேர்ப்பு
நாகர்கோவில் பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது தோழி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் இன்ஸ்பெக்டர் வருமானத்துக்கு அதிகமாக 171.78 சதவீதம் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாகர்கோவில்:
நாகர்கோவில் பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது தோழி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதில் இன்ஸ்பெக்டர் வருமானத்துக்கு அதிகமாக 171.78 சதவீதம் சொத்துக்கள் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இன்ஸ்பெக்டர் வீட்டில் சோதனை
நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் சேவியர் பாண்டியன். இவர் நாகர்கோவில் கோர்ட்டில் குற்றவியல் உதவி இயக்குனராக உள்ளார். இவருடைய மனைவி கண்மணி (வயது 52), நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். கணவன், மனைவி இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பீட்டர் பால் தலைமையில் இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் காலையில் இன்ஸ்பெக்டர் கண்மணி வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து தீவிர சோதனை நடத்தினர். இதேபோல் இன்ஸ்பெக்டர் கண்மணியின் தோழியான அமுதா என்பவருடைய வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
பணம்- நகைகள் பறிமுதல்
இன்ஸ்பெக்டர் கண்மணி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கமும், வங்கியில் நிரந்தர வைப்புத்தொகையில் ரூ.91 லட்சத்துக்கான ஆவணம் மற்றும் 91 பவுன் தங்க நகைகள், சில சொத்து பத்திரங்கள், பரிசு பொருட்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கான உரிய ஆவணங்கள் குறித்து சேவியர் பாண்டியன், கண்மணி ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் தோழி வீட்டில் நடந்த சோதனையில் ரூ.23 லட்சத்துக்கான கடன் பத்திரங்கள் மற்றும் சில முக்கிய ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
3 பிரிவுகளில் வழக்கு
போலீசாரின் சோதனை நேற்றுமுன்தினம் காலை முதல் மாலை வரை நடந்தது. பின்னர் கைப்பற்றப்பட்ட பணம், பத்திரங்கள், பரிசு பொருட்கள், நகைகள் குறித்த உரிய ஆவணங்கள் பற்றிய விசாரணை நேற்று அதிகாலை 4 மணி வரை விடிய, விடிய நடந்தது.
இதுதொடர்பாக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் 3 பிரிவுகளில் இன்ஸ்பெக்டர் கண்மணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவரது கணவர் சேவியா் பாண்டியனும் சேர்க்கப்பட்டுள்ளார்.
171 சதவீதம் சொத்து சேர்ப்பு
இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் தோழி அமுதா ஆகியோரின் வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்டவை சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துைற இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போலீசாரால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், சொத்து பத்திரங்கள், பணம் மற்றும் நகைகள் ஆகியவற்றை ஒப்பிடுகையில் பெண் இன்ஸ்பெக்டர் கண்மணி மற்றும் அவரது கணவர் சேவியர் பாண்டியன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக 171.78 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story