ஆதார் இ-சேவை மையம் இயங்காததால் பொதுமக்கள் அவதி
சிவகிரி தாலுகா அலுவலகத்தில் ஆதார் இ-சேவை மையம் இயங்காததால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர்.
சிவகிரி:
சிவகிரி தாலுகா அலுவலகத்தில் ஆதார் இ-சேவை மையம் இயங்காததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
இ-சேவை மையம்
சிவகிரி தாலுகா அலுவலகத்தில் ஆதார் இ-சேவை மையம் உள்ளது. இந்த மையத்தால் சிவகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஆதார் அட்டையில் பெயர் திருத்தம், செல்போன் எண் இணைப்பு, பிறந்த தேதி மாற்றம், முகவரி திருத்தம் செய்து பயன் அடைந்து வந்தனர்.
இந்தநிலையில் கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆதார் இ-சேவை மையம் கடந்த 2 மாதங்களாக செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஆதார் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய முடியாமலும், புதிய ஆதார் அட்டை எடுக்க முடியாமலும் அவதிப்படுகின்றனர். மேலும் ஆதார் இ-சேவை மையம் எப்போது திறக்கப்படும் என தினமும் பொதுமக்கள் வந்து பார்த்து ஏமாற்றத்துடன் பார்த்து திரும்பிச் செல்கின்றனர். சிலர் வெகு நேரமாக காத்து கிடக்கும் பரிதாப நிலையும் காணப்படுகிறது.
புளியங்குடி நகராட்சிக்கு சென்று ஆதார் திருத்தம் செய்வதற்கு சென்றால் பொதுமக்களை அலைக்கழிப்பு செய்கின்றனர். இதனால் விவரம் தெரியாத ஏழை, எளிய, வயதான பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
மீண்டும் செயல்பட கோரிக்கை
நெல்லை அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கீழ் நெல்லை, தென்காசி, கடையநல்லூர், சிவகிரி, மானுர் ஆகிய 5 இ-சேவை மையங்கள் செயல்பட்டு வந்தன. இசேவை மையங்களின் தலைமையகத்தில் உள்ள சாப்ட்வேர் அப்டேட் ஆகக்கூடிய நேரங்களில் இ-சேவை மையங்களில் ஆதார் பயனாளர்கள் நிரப்பித்தரக்கூடிய விண்ணப்பப் படிவங்கள் மாறுபடும். அப்போது இ-சேவை மையங்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் தொடர்ச்சியாக தள்ளுபடி ஆகின. இதன்காரணமாக முன்னறிவிப்பு ஏதுமின்றி 5 இ-சேவை மையங்களின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டது.
தென்காசி மற்றும் கடையநல்லூர் இ-சேவை மையங்கள் மீண்டும் செயல்பட அனுமதி அளித்துள்ளது. தற்போது நெல்லை, சிவகிரி, மானூர் இ-சேவை மையங்கள் நிலைமை கேள்விக்குறியாகி உள்ளது.
இதுசம்பந்தமாக துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிவகிரி தாலுகா அலுவலக வளாகத்தில் தொடர்ந்து இ-சேவை மையம் செயல்பட வேண்டும் எனவும் வழக்கறிஞர் ஜவஹர்லால் நேரு மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story