வெளிநாட்டு கைதிகள் திடீர் மோதல்
திருச்சி சிறப்பு முகாமில் வெளிநாட்டு கைதிகள் திடீரென மோதிக் கொண்டதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
திருச்சி
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் இலங்கை, வங்காளதேசம், நைஜீரியா, ருவாண்டா, பல்கேரியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும்போதும் அல்லது வழக்கு முடிந்து அவர்களுடைய சொந்த நாட்டுக்கு அனுப்பும் வரையிலும் சிறப்பு முகாமிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் சமைத்து உண்பதற்கும், செல்போன், மடிக்கணினி போன்றவற்றை பயன்படுத்தவும் அனுமதி உள்ளது. இந்தநிலையில் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஒரு அறையில் 2 நைஜீரிய கைதிகளும், ஐவரிகோஸ்ட் நாட்டை சேர்ந்த டேவிட் என்ற கைதியும் தங்கியிருந்தனர். இவர்களுக்குள் அறையை பங்கிட்டுக் கொள்வதில் ஏற்கனவே பிரச்சினை இருந்து வந்தது.
திடீர் மோதல்
இந்தநிலையில் ஐவரிகோஸ்ட் கைதி டேவிட் நேற்று முன்தினம் காலை தனது உறவினருக்கு போன் செய்வதற்காக நைஜீரிய கைதியான நிக்கிபிலிப்பிடம் செல்போனை கேட்டார். அதற்கு மற்றொரு நைஜீரிய கைதி செல்போன் தர எதிர்ப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக ஐவரிகோஸ்ட் கைதிக்கும், நைஜீரிய கைதிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர். அப்போது நைஜீரிய கைதி தாக்கியதில் டேவிட் காயமடைந்தார்.
இவர்கள் மோதலை விலக்கிவிட முயன்ற நிக்கிபிலிப்பும் தாக்கப்பட்டார். இதில், அவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயம் அடைந்த 2 பேரையும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி சிறப்புமுகாமில் வெளிநாட்டு கைதிகள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story