வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்-சின்னம் பொருத்தும் பணி
வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்-சின்னம் பொருத்தும் பணி நடந்தது.
அரியலூர்:
89 வேட்பாளர்கள்
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நகராட்சிகள், உடையார்பாளையம் மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது.
இதில் அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த வார்டுகளில் மொத்தம் 89 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பாளர்களின் தீவிர பிரசாரத்தால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
பெயர்- சின்னம் பொருத்தும் பணி
மேலும் தேர்தல் தொடர்பான பணிகளில் அலுவலர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், அவர்களது சின்னம் அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி நேற்று தொடங்கி நடந்தது.
நகராட்சி அலுவலகத்தில் வேட்பாளர்கள் அல்லது அவர்களது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டுகளை பொருத்தி, வாக்குப்பதிவு எந்திரங்கள் நல்ல முறையில் இருக்கிறதா? என்று ஆய்வு செய்தனர். பின்னர் அவற்றுக்கு ‘சீல்’ வைத்தனர்.
ஜெயங்கொண்டம்
இதேபோல் ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கிறது. இந்த வார்டுகளில் மொத்தம் 108 பேர் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் ஓட்டுகளை பதிவு செய்ய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, செங்குந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட 8 இடங்களில் மொத்தம் 38 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் வாக்குப்பதிவு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் நடக்கிறது.
இதையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டுகளை பொருத்தும் பணி ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இதில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் பூங்கொடி தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் சுபாஷினி மற்றும் அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டுகள் பொருத்தப்பட்டன. இந்த பணியை தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
பாதுகாப்பாக வைக்கப்படுகிறது
அப்போது, ஒவ்வொரு வார்டாக வேட்பாளர்களின் முகவர்கள் அழைக்கப்பட்டு அவர்களது முன்னிலையில் வாக்குச்சீட்டுகள் பொருத்தப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டன. வேட்பாளர்களின் பெயர், சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டுகள் பொருத்தப்பட்ட பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் அந்தந்த உள்ளாட்சி அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.
அவற்றை வாக்குப்பதிவுக்கு முந்தையநாள் பாதுகாப்பாக வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. நகராட்சி பொதுப்பணி மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வரதராஜன்பேட்டை பேரூராட்சியிலும் வாக்குப்பதிவு எந்திரங்களில் வாக்குச்சீட்டு பொருத்தும் பணி நடைபெற்றது.
Related Tags :
Next Story