கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் வருகை


கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் வருகை
x
தினத்தந்தி 14 Feb 2022 2:43 AM IST (Updated: 14 Feb 2022 2:43 AM IST)
t-max-icont-min-icon

கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு பல்வேறு வகையான வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன.

கீழப்பழுவூர்:

பறவைகள் கணக்கெடுப்பு
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டியில் பறவைகள் சரணாலயம் உள்ளது. முக்கிய சுற்றுலாத்தலமான இந்த சரணாலயத்திற்கு வெளிநாடு மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த சரணாலயத்தில் வனத்துறை சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. தமிழ் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் துறை முன்னாள் தலைவர் டாக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில் தன்னார்வலர்கள் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தில் பறவைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சரணாலயத்திற்கு பல்வேறு வகையான நில பறவைகளும், நீர் பறவைகளும் வந்துள்ளன. கணக்கெடுப்பு பணியின்போது நவீன கேமரா, பைனாகுலர் உள்ளிட்ட அதிநவீன தொலைநோக்கு கருவிகளைக் கொண்டு ஒவ்வொரு பறவைகளின் வகை, அதன் தாய் நாடு, அதன் நிறம், இனப்பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு நிலைகள் குறித்து கணக்கெடுத்து பதிவு செய்தனர்.
பல்வேறு விதமான பறவைகள்
பறவைகள் கணக்கெடுப்பு குறித்து டாக்டர் சிவசுப்பிரமணியன் கூறுகையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பறவைகள் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது. குறிப்பாக லடாக், தெற்காசிய பகுதியில் இருந்து கூழைக்கிடா, வெள்ளை அரிவாள் மூக்கான், மிளிரும் அரிவாள் மூக்கான், சாம்பல் நிற பறவை உள்ளிட்ட பல்வேறு வகையான வெளிநாட்டு, உள்நாட்டு பறவைகள் வந்துள்ளன.
சரணாலயத்திற்கு வரக்கூடிய பறவைகள் கணக்கெடுக்கும் பணி முடிக்கப்பட்டு, பறவைகள் வருகை, அதன் தங்கும் காலம், இனப்பெருக்கம் குறித்து வனத்துறையிடம் அறிக்கை அளிக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் சரணாலயத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று தெரிவித்தார்.

Next Story