மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.58 ஆயிரம் பறிமுதல்
மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட ரூ.58 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பலூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் குரும்பலூர் பேரூராட்சி முத்திரைத்தாள் தனி தாசில்தார் பழனிசெல்வன் தலைமையில் மருவத்தூர் போலீசார் கண்ணன், கீதா ஆகியோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் நேற்று காலை பெரம்பலூர்-துறையூர் சாலையில் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக சென்ற ஒரு மோட்டார் சைக்கிளை அவர்கள் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில், ரூ.58 ஆயிரத்து 230 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தியதில், அவர் செஞ்சேரியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் கார்த்திக் (வயது 27) என்பது தெரியவந்தது.
மேலும் மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து குரும்பலூர் பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மெர்சியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story