ஆளுங்கட்சி தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டால் தமிழகத்தில் சட்டசபையை முடக்கும் சூழ்நிலை ஏற்படலாம்-தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
ஆளுங்கட்சி தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டால் தமிழகத்திலும் சட்டசபையை முடக்கும் சூழ்நிலை ஏற்படலாம் என்று ஓமலூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
ஓமலூர்:
ஆளுங்கட்சி தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டால் தமிழகத்திலும் சட்டசபையை முடக்கும் சூழ்நிலை ஏற்படலாம் என்று ஓமலூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தேர்தல் பிரசார கூட்டம்
சேலம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாவட்டம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சேலத்தில் நேற்று 3-வது நாளாக அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அதன்படி, ஓமலூர், காடையாம்பட்டி, கருப்பூர் ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரசார கூட்டம் ஓமலூரில் நேற்று நடந்தது. இதில், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த சட்டசபை தேர்தலில் ஓமலூர் தொகுதியில் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை என நிரூபித்துள்ளோம். இந்த நிலை வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தொடர வேண்டும். தமிழகத்தில் மாநில தேர்தல் ஆணையம் அடிக்கடி சட்டத்தை மாற்றி வருகிறது. ஆளுங்கட்சிக்கு சாதகமாகவும், எதிர்க்கட்சிகளுக்கு பாதகமாகவும் அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றி கொள்கிறது.
நடுநிலையோடு...
தேர்தல் ஆணையம் என்பது தன்னாட்சி பெற்ற அமைப்பு. அது நடுநிலையோடு செயல்பட வேண்டும். அ.தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டது. மக்கள் செல்வாக்கு பெற்றவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவார்கள். மக்கள் அளித்த தீர்ப்பை தேர்தல் ஆணையம் முழுமையாக செயல்படுத்தியது. ஆனால் தற்போது தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைக்கூலியாக மாறிவிட்டது. பல இடங்களில் எதிர்க்கட்சியினருக்கு பாதகமாக செயல்படுகிறது. அதனால் தான் கவர்னரை சந்தித்து மனு அளித்துள்ளோம்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடுநிலையோடு நேர்மையுடன் நடத்துவோம் என தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் உறுதியளித்துள்ளது. இதனால் நேர்மையாக நடத்தவில்லை என்றால் கோர்ட்டு அவமதிப்புக்கு தேர்தல் ஆணையம் ஆளாக நேரிடும். எனவே, தேர்தல் அலுவலர்கள் நேர்மையாக நடுநிலையோடு முறையாக செயல்பட வேண்டும். இனியும் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் அலுவலர்கள் செயல்பட்டால் அதனை அ.தி.மு.க. சட்டரீதியாக சந்திக்கும்.
சட்டமன்றத்தை முடக்கும் நிலை
அ.தி.மு.க.வை எதிர்க்க தெம்பும், திராணியும் தி.மு.க.வுக்கு இல்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ஏன் நேரடியாக மக்களை சந்தித்து வாக்கு கேட்க வரவில்லை. மக்களை சந்திக்க தெம்பு, திராணி இன்றி தி.மு.க.வினர் முறைகேட்டில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றி மீண்டும் வெற்றி பெற முயற்சி செய்கிறார்கள். முறைகேடு இன்றி நேர்வழியில் தி.மு.க. ஜெயித்ததாக சரித்திரம் இல்லை.
மேற்கு வங்கத்தில் சட்டமன்றத்தை முடக்கி அந்த மாநிலத்தின் கவர்னர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தை ஆளுகின்ற தி.மு.க. முறைகேட்டில் ஈடுபட்டால் இங்கேயும் சட்டமன்றத்தை முடக்கும் சூழ்நிலை எதிர்காலத்தில் ஏற்படலாம். தில்லுமுல்லு செய்து வெற்றி பெறலாம் என நினைக்கும் தி.மு.க.வின் மக்கள் விரோத போக்கை அ.தி.மு.க. வேடிக்கை பார்க்காது. ஆளுங்கட்சியின் எந்த அடக்கு முறைக்கும் நாங்கள் அஞ்சப்போவதில்லை.
செல்வாக்கு சரிந்துவிட்டது
கரூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, மாதந்தோறும் மகளிருக்கு கொடுப்பதாக சொன்ன ரூ.1,000-ஐ ஏன் இன்னும் கொடுக்கவில்லை என்று கேட்டதற்கு, இன்னும் 4 ஆண்டுகள் இருக்கிறது என்று உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இதில் இருந்து அடுத்த 4 ஆண்டுகள் ஆனாலும் அந்த திட்டம் செயல்படுத்தப்படாது என உறுதியாகிவிட்டது.
தமிழகத்தில் மக்கள் விரோத தி.மு.க. ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இன்னும் 27 மாதங்கள் தான் தி.மு.க. ஆட்சியில் இருக்கும். பொதுமக்களிடம் தி.மு.க.வின் செல்வாக்கு சரிந்துவிட்டது. ஆட்சிக்கு வந்த 9 மாத காலத்தில் எந்த கட்சிக்கும் இப்படி நேர்ந்ததில்லை. தமிழகத்தில் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடக்கும்போது, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும். திறமையற்ற முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் செம்மலை, மணி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பல்பாக்கி கிருஷ்ணன், வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அசோகன், கோவிந்தராஜ், சேரன் செங்குட்டுவன், சுப்பிரமணியம், மணிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேச்சேரி-மேட்டூர்
இதைத்தொடர்ந்து மேச்சேரி, ஜலகண்டாபுரம் பேரூராட்சிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசும்போது, மேச்சேரி-ஓமலூர் ரோட்டை 4 வழிச்சாலையாக மாற்றும் திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. தற்போது அந்த பணி நடைபெற்று வருகிறது. அதேபோல், தொப்பூர்-பவானி ரோட்டை 4 வழிச்சாலையாக மாற்ற பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்தால் தற்போது அந்த பணி நடைபெறவில்லை. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை தி.மு.க. அரசு நிறைவேற்றாமல் உள்ளது. இந்த தேர்தலில் அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும், என்றார்.
இதையடுத்து மேட்டூர் நகராட்சியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பேசும்போது, தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதால் தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதனால் அ.தி.மு.க.வுக்கு சாதமான சூழ்நிலை அமைந்துள்ளது. எனவே, அ.தி.மு.க ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி வாக்குகளை சேகரிக்க வேண்டும், என்று கூறினார்.
Related Tags :
Next Story