‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 14 Feb 2022 2:54 AM IST (Updated: 14 Feb 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலை அமைக்கும் பணி தொடங்கியது

சேலம் மாவட்டம் ஆவனி பேரூர் கீழ்முகம் கிராமம் மல்லிப்பாளையம் வார்டில் பல ஆண்டுகளாக சாலை வசதிகள் இல்லை. இதுபற்றி அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ‘தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. உடனே நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியை தொடங்கினர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
-ஹரிகிருஷ்ணன்,  ஆவனி பேரூர் கீழ் முகம், சேலம்.
===
குண்டும், குழியுமான சாலை

நாமக்கல்லில் திருச்சி சாலையில் இருந்து மோகனூர் சாலையை இணைக்க வகுரம்பட்டி வங்கி அருேக இணைப்பு சாலை ஒன்று உள்ளது. இந்த சாலை சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், மீண்டும் சேதமடைந்த நிலையிலேயே இருக்கிறது. குண்டும், குழியுமான இந்த சாலையால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கர், நாமக்கல்.
===
பயன்படாத குடிநீர் தொட்டி

சேலம் மாவட்டம் கொளத்தூரை அடுத்துள்ள கோவில்பாளையம் கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டியின் மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால் குடிநீருக்காக அந்த பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து மின் மோட்டாரை சரிசெய்து தண்ணீர் வழங்க வேண்டும்.
-ஊர்மக்கள், கோவில்பாளையம், சேலம்.
===
போக்குவரத்துக்கு இடையூறு

சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா பவானி மெயின் ரோட்டின் ஓரங்களில் உள்ள கடைகளின் வாடிக்கையாளர்கள் சாலை ஓரத்தில் வண்டிகளை நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதுகுறித்து புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி பவானி மெயின் ரோட்டின் ஓரங்களில் வண்டி நிறுத்துவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சங்ககிரி, சேலம்.

சேலம் 4 ரோட்டில் இருந்து சத்திரம் செல்லும் சாலை மாநகராட்சியால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் நடைபாதையுடன், மின் விளக்குகளும் அமைக்கப்பட்டன. இந்த சாலை வழியாக சேலம் ஜங்சன், இளம்பிள்ளை போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் எப்போதும் அந்த சாலை பரபரப்பாக காணப்படும். இந்தநிலையில் சிலர் நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து தங்களது மோட்டார் சைக்கிள், ஆட்டோ, கார் ஆகியவற்றை நிறுத்துகின்றனர். இதனால் லாரி, பஸ்கள் செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?...
விக்னேஷ், 4 ரோடு, சேலம்.
====
வேகத்தடை வேண்டும்

சேலம் பழைய பஸ் நிலையம்-புதிய பஸ் நிலையத்தை இணைக்கும் முக்கிய மையமாக பெரியார் மேம்பாலம் உள்ளது. பெரியார் மேம்பாலத்தின் இருபுறங்களான அண்ணா பூங்கா முன்பும், ஓமலூர் சாலையிலும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பின்னர் நாளடைவில் அந்த வேகத்தடை சேதமடைந்தது. இதையடுத்து அங்கு புதிதாக வேகத்தடை அமைக்கப்படவில்லை. 4 ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் அண்ணா பூங்கா முன்பு காந்தி மைதானம் நோக்கி வேகமாக செல்கின்றன. இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெரியார் மேம்பாலத்தில் இருந்து, ரத்தினசாமிபுரத்துக்கு செல்ல சாலையை கடக்க மிகவும் சிரமமாக உள்ளது. எனவே பெரியார் மேம்பாலத்தின் இருபுறங்களிலும் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும்.
ஊர் பொதுமக்கள், ரத்தினசாமிபுரம், சேலம்.
===
சாலைகளில் சுற்றும் கால்நடைகள்

கிருஷ்ணகிரி நகரில் சென்னை, பெங்களூரு, சேலம், புதுச்சேரி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலைகளில் பலரும் ஆடு, மாடுகளை அவிழ்த்து விடுகிறார்கள். இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. பல நேரங்களில் கால்நடைகள் வாகனங்களில் அடிபட்டு இறக்கும் சூழ்நிலையும் உள்ளது. மேலும் கால்நடைகள் சாலைகளில் நீண்ட நேரம் நின்றவாறு இருப்பதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடுகளை பிடித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும்.
மணி, கிருஷ்ணகிரி.

Next Story