தூத்துக்குடியில் முன்னாள் தலைமை செயலாளர் ஒருநபர் ஆணையம் முன்பு ஆஜரானார்
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று(திங்கட்கிழமை) ஒருநபர் ஆணையம் முன்பு ஆஜரானார்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று ஒருநபர் ஆணையம் முன்பு ஆஜரானார். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
ஒருநபர் ஆணையம்
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த ஆணையத்தில், ஏற்கனவே 35 கட்டங்களாக பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடைபெற்று உள்ளது. இதற்காக 1,421 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில், 1,042 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக 1,516 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன. இந்த விசாரணை இறுதி கட்டத்தை எட்டி வருகிறது.
36-வது கட்ட விசாரணை
இந்த நிலையில் 36-வது கட்ட விசாரணை நேற்று தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் தொடங்கியது.
இதில் ஆஜராவதற்காக தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன், உள்துறை செயலாளர், பொதுத்துறை செயலாளர் உள்பட 7 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதில் முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் ஆகியோர் நேற்று ஒருநபர் ஆணையம் முன்பு ஆஜராகினர். இருவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது.
18-ந்தேதி வரை
இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ராஜேந்திரன் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விசாரணை வருகிற 18-ந் தேதி வரை தொடர்ந்து நடக்கிறது.
Related Tags :
Next Story