திண்டுக்கல் மாவட்டத்தில் 11 வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்பாடுகள் தீவிரம்
திண்டுக்கல் மாவட்டத்தில் 11 வாக்கு எண்ணும் மையங்களிலும் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றன.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவுக்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
இதற்கிடையே தேர்தலில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு பள்ளிகள், கல்லூரிகளில் 11 மையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே இருக்கின்றன. மேலும் தேர்தல் நிறைவுபெற்ற ஒருசில மணி நேரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். எனவே வாக்கு எண்ணும் மையங்களை தயார்படுத்தும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
தடுப்புகள்-மேஜைகள்
இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு தனி அறைகள் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன. அந்த அறைகளில் வார்டு வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. இதையொட்டி அந்த அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அடங்கிய பெட்டிகளை வைப்பதற்கு கோடு வரையும் பணி நடக்கிறது.
மேலும் அந்த அறைகளில் இருந்து வாக்கு எண்ணும் இடத்துக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் பாதையில் வெளிநபர்கள் நுழையாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்படுகிறது. இதுதவிர வாக்கு எண்ணும் இடத்தில் மேஜைகள், தடுப்புகள் அமைக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. மேலும் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் அனைத்தும் கண்காணிப்பு கேமரா மூலம் பதிவு செய்யப்படுகிறது.
கட்டுப்பாட்டு அறைகள்
எனவே வாக்கு எண்ணும் மையத்தில் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடக்கிறது. மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாக்கு எண்ணும் மையத்தை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடக்கின்றன. இதற்கிடையே ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லூரி, அம்மன் கலைக்கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணியை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Related Tags :
Next Story