நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்: விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் ஆய்வு


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்: விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் ஆய்வு
x
தினத்தந்தி 14 Feb 2022 10:12 PM IST (Updated: 14 Feb 2022 10:12 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலையொட்டி செய்துள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன் கடலூர் வந்தார்.


தொடர்ந்து அவர் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் மாநகராட்சி தேர்தலுக்காக செய்துள்ள பாதுகாப்பு ஏற் பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கரிகால் பாரிசங்கர், விஜிகுமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குருமூர்த்தி, கவிதா, கணபதி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.


ஆய்வு


அப்போது மாவட்டம் முழுவதும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். தேர்தலில் எவ்வித பிரச்சினைக்கும் இடம் கொடுக்காமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். தேர்தல் நடக்காத பகுதியில் உள்ள போலீசார், தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.


தொடர்ந்து அவர் கடலூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பதற்றமான வாக்குச் சாவடி மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையத்திலும் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு எவ்வித பிரச்சினையும் வராமல் தடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தினார்.


முன்னதாக மாவட்டம் முழுவதும் நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் உரிய அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின் போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் உடனிருந்தார்.

Next Story