கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல்-ஜூலை 31-ந் தேதி வரை நடக்கிறது


கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல்-ஜூலை 31-ந் தேதி வரை நடக்கிறது
x
தினத்தந்தி 14 Feb 2022 10:19 PM IST (Updated: 14 Feb 2022 10:19 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் கொள்முதல் ஜூலை 31-ந் தேதி வரை நடக்கிறது.

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொப்பரை தேங்காய் கொள்முதல்
விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்களின் வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. அதன்படி தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில், அவர்கள் விளைவித்த கொப்பரை தேங்காய் மத்திய அரசின் நாபெட் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கொள்முதல் இலக்காக 1,800 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரவை கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.105.90-க்கும், பந்து கொப்பரை தேங்காய் ஒரு கிலோ ரூ.110-க்கும், 6 மாத காலத்திற்கு கொள்முதல் செய்யப்படவுள்ளது.
பயன் அடையலாம்
இந்த திட்டம் கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிகணக்கு எண் ஆகிய விவரங்களுடன், கிருஷ்ணகிரி மற்றும் போச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் கண்காணிப்பாளர்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.
கொப்பரை தேங்காய் கொள்முதல் இந்த மாதம் (பிப்ரவரி) தொடங்கி வருகிற ஜூலை மாதம் 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான உரியத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
தமிழ்நாடு அரசு தென்னை விவசாயிகளின் நலனிற்காக மேற்கொண்டுள்ள இந்த கொள்முதல் திட்டத்தில் சென்னை விவசாயிகள் அதிகளவில் கலந்து கொண்டு பயன் அடைய வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story