வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி
ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி நடந்தது.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இங்கு வருகிற 19-ந்தேதி நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியினர், சுயேச்சைகள் உள்பட 80 பேர் களமிறங்கியுள்ளனர். அவர்கள் தங்கள் போட்டியிடும் வார்டில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தேர்தலையொட்டி பேரூராட்சியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இங்கு மொத்தம் 31 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு வாக்குச்சாவடிக்கு ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக வாக்களிப்பதற்கு வசதியாக 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட உள்ளது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி வேட்பாளர்கள் முன்னிலையில் நேற்று நடந்தது.
பேரூராட்சி அதிகாரிகள் வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்களை பொருத்திய பின்பு வேட்பாளர்களிடம் காண்பித்தனர். இதில் பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் பூதிப்புரம் பேரூராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணிகளை கலெக்டர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் முத்துக்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். போடி நகராட்சி அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் முன்னிலையில் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி நடந்தது.
Related Tags :
Next Story