முதலாம் ஆண்டு பாட வகுப்புகள் தொடங்கின


முதலாம் ஆண்டு பாட வகுப்புகள் தொடங்கின
x
தினத்தந்தி 14 Feb 2022 11:18 PM IST (Updated: 14 Feb 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பாட வகுப்புகள் தொடங்கின.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு பாட வகுப்புகள் தொடங்கின.
மாணவர் சேர்க்கை
ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி ரூ.345 கோடியில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு முதல் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக 100 மாணவர்களை சேர்க்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 
இந்தநிலையில் மதுரையில் புதிதாக தொடங்கப்பட்டு உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என்றும் தற்காலிக கட்டிடத்தில் இந்த கல்லூரி இயங்கும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்து இருந்தது. அதன்படி ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் அனைத்து கட்டமைப்புகளும் நிறைவடைந்து உள்ளதால் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் சேரும் மாணவர்கள் 50 பேரை ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் சேர்த்து முதலாம் ஆண்டு பாடங்களை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 
வரவேற்பு பலகை
இந்தநிலையில்  ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கின. கல்லூரியில் மாணவ-மாணவிகளை வரவேற்கும் வகையில் முதல்வர் பெயரில் வரவேற்பு பலகை வைத்து முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளை வரவேற்றனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் டாக்டர் அல்லி கூறியதாவது:- ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகள் தொடங்கி உள்ளன. இந்த கல்லூரியில் 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் அடிப் படையில் இதுவரை 6 பேரும், அகில இந்திய ஒதுக்கீட்டில் 4 பேரும் என மொத்தம் 10 பேர் இதுவரை சேர்ந்துள்ளனர். பொது பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் இதுவரை 4 பேர் சேர்ந்துள்ளனர்.மொத்தம் இதுவரை 14 பேர் சேர்ந்துள்ளனர். 
இந்த கல்லூரியை முதல்கட்ட கலந்தாய்வில் தேர்வு செய்த மாணவ-மாணவிகள் தொடர்ந்து சேர்ந்து வருகின்றனர். 100 இடங்களும் பூர்த்தி செய்யப்பட்டு விடும்.
ஆரம்ப கட்ட பாடம்
தற்போது இவர்களுக்கு மருத்துவம் சார்ந்த ஆரம்ப கட்ட விளக்க பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் சேர்ந்த பின்னர் வழக்கமான பாட வகுப்புகள் தொடங்கி நடத்தப் படும். எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 50 பேர் சேர்க்கை என்பது அவர்கள் மூலம் நடத்தப்படும். அவர்களுக்கான எய்ம்ஸ் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மருத்துவ கல்லூரி கட்டமைப்புகளுடன் தனியாக அவர்களின் கல்வி கற்பித்தல் வகுப்புகள் நடைபெறும். எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான இடம் மட்டுமே ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் வழங்குகிறோம். 
அவர்களின் பாட வகுப்புகள் தனி, செயல்முறை வகுப்புகள் தனியாக நடைபெறும். ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி பாடவகுப்புகள் தனியாக நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். 
மும்முரம்
முதல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கிய நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்த மாணவ-மாணவிகள் கல்லூரி வளாகத்தில் தங்களின் பெற்றோர்களுடன் வந்திருந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். பல ஆண்டு காலமாக கனவாக இருந்து வந்த மருத்துவ கல்லூரி கோரிக்கை ராமநாதபுரத்தில் பாட வகுப்புகள் தொடங்கி உள்ளதை தொடர்ந்து நனவாகி உள்ளது.

Next Story