குமரி மீனவர்கள் 10 பேர் விசைப்படகுடன் சிறைபிடிப்பு


குமரி மீனவர்கள் 10 பேர் விசைப்படகுடன் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 14 Feb 2022 11:53 PM IST (Updated: 14 Feb 2022 11:53 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் குமரி மீனவர்கள் 10 பேர் விசைப்படகுடன் சிறைபிடிக்கப்பட்டனர். அபராதமின்றி மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொல்லங்கோடு, 
மராட்டிய மாநிலத்தில் குமரி மீனவர்கள் 10 பேர் விசைப்படகுடன் சிறைபிடிக்கப்பட்டனர். அபராதமின்றி மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரி மீனவர்கள்
குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் கொச்சி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு மீன்பிடித்து வருகிறார்கள். அதன்படி சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த ஜெகன் என்பவருக்கு சொந்தமான ஜெபி என்ற விசைப்படகில் 10 குமரி மீனவர்கள் கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
மராட்டிய மாநில கடல் எல்லை பகுதியில் கடந்த 8-ந் தேதி படகின் ஸ்டியரிங் உடைந்து படகை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மீனவர்கள் சேட்டிலைட் போன் மூலம் இந்திய கடற்படையினரிடம் உதவி கோரி உள்ளனர்.
சிறைபிடிப்பு 
உடனே இந்திய கடற்படையினர் மீனவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று படகின் உடைந்த பாகத்தை தற்காலிகமாக சரி செய்து கொடுத்துள்ளனர். பின்னர் மீனவர்கள் தங்களது படகை முழுமையாக சரி செய்ய வேண்டி மராட்டிய மாநிலத்தில் உள்ள ரெத்தினகிரி துறைமுகத்திற்கு கொண்டு வந்து உடைந்த பாகத்தை சரி செய்தனர்.
பின்னர் மீண்டும் படகை கடலுக்குள் செலுத்த தயாராக இருந்த போது மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களுடைய படகை சிறைபிடித்தனர். மேலும் படகில் உள்ள மீன்களை ஏலமிட போவதாகவும், அனுமதி இல்லாமல் படகு வந்ததால் அதற்கு அபராதம் விதிக்கப்படும் என்று மீனவர்களையும் சிறைபிடித்ததாக தெரிகிறது.
தமிழக அரசுக்கு கோரிக்கை
மேலும் இது சம்பந்தமாக மீனவர்கள் குமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அதே சமயத்தில் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளனர். அதில், அபராதமின்றி எந்த நடவடிக்கையும் எடுக்காத வகையில் தமிழக அரசு மீட்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க இணைய நிர்வாகக்குழு உறுப்பினர் ஜோஸ்பில்பின், குமரி மீனவர்களை மீட்க தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Next Story