குண்டும், குழியுமாக காணப்படும் சாலை
திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
திருவாரூர்:
திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் குண்டும், குழியுமாக காணப்படும் சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
புதிய பஸ் நிலையம்
திருவாரூர் புதிய நிலையம் ரூ.13 கோடியே 36 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த பஸ் நிலையமானது நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ளது. இதனால் நெடுஞ்சாலையில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்குள் செல்வதற்கும், வெளியில் வருவதற்கும் இருவழி இணைப்பு சாலை போடப்பட்டுள்ளது.
குண்டும், குழியுமான சாலை
இந்த இணைப்பு சாலை சேதமடைந்து குண்டு, குழியுமாக காட்சி அளிக்கிறது. மழை காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடந்த ஆண்டு இறுதியில் இந்த இணைப்பு சாலை நகராட்சி மூலம் சீரமைப்பட்டது. இந்நிலையில் தற்போது பெய்து வரும் மழையினால் புதிய பஸ் நிலையம் இணைப்பு சாலை மீண்டும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக அரசு பஸ்கள் சேதமடைந்த சாலையில் சிரமப்பட்டு செல்கின்றன. இதனால் வாகனங்கள் பழுதடைந்து விடுகின்றன.
சீரமைக்க வேண்டும்
இந்த சாலையில் ஒரே இடத்தில் தான் சேதமடைந்து குண்டு, குழியுமாக மாறி வருகிறது. எனவே இந்த இடத்தில் தண்ணீர் தேங்காதவாறு வடிகால் ஏற்படுத்திட வேண்டும்.
தொடர்ந்து தற்காலிகமாக சீரமைப்பதை கைவிட்டு நகராட்சி நிர்வாகம் நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
Related Tags :
Next Story