காதலர் தினத்தில் 14 ஜோடிகளுக்கு திருமணம். தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் காதலர் தினமான நேற்று 14 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார்.
வேலூர்
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் காதலர் தினமான நேற்று 14 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. தாலிகட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார்.
14 ஜோடிகளுக்கு திருமணம்
உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதல் செய்யும் ஒவ்வொரும் தங்களது காதலை அன்றைய தினத்தில் வெளிப்படுத்துவார்கள். வீட்டில் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அன்றைய தினத்தில் அவர்கள் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்வார்கள்.
காதலர் தினமும், சுபமுகூர்த்த தினமும் ஒரே நாள் என்றால் அந்த நாள் கூடுதல் சிறப்பாக அமைந்துவிடும். அதுபோன்று காதலர் தினமான நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றது. காதல் திருமணமும், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமும் கோவில்களில் நடந்தது.
வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் நேற்று ஒரேநாளில் 14 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் செய்து கொண்ட ஜோடிகள் காதலை தெரிவித்து அன்பை பரிமாறிக்கொண்டனர். அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் ஆரவாரத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
14 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றதால் கோவில் வளாகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
ஓட்டம் பிடித்த காதல்ஜோடிகள்
காதலர் தினத்தையொட்டி வேலூர் கோட்டைக்கு செல்ல காதல் ஜோடிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கோட்டை நுழைவு வாயில் முன்பு ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அப்போது கோட்டைக்கு வந்த காதல் ஜோடிகளை போலீசார் திருப்பி அனுப்பினர். சில ஜோடிகளுக்கு அறிவுரை வழங்கி அனுப்பினர். போலீசாரை பார்த்ததும் சில ஜோடிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதனால் காதல் ஜோடிகளால் நிரம்பி வழியும் கோட்டை மதில்சுவர் நடைபாதை, கொத்தளம் பகுதிகள் காதல் ஜோடிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது. காதலிக்கு பரிசாக ரோஜா வழங்கப்படுவதால் உயர்ரக ஊட்டி ரோஜாப்பூ ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டது.
திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
வேலூரை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், ஒரு பெண்ணுக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கோட்டையில் உள்ள நாக தேவதை அம்மன் கோவிலில் நேற்று திருமணம் நடக்க இருந்தது.
மணமேடையில் இருந்த மணப்பெண் திடீரென தனக்கு மாப்பிள்ளை குடும்பத்தினர் பிடிக்கவில்லை. தாலி கட்டிக்கொள்ளமாட்டேன் என்று கூறினார். இதையடுத்து இரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திருமணம் பாதியிலேயே நின்று போனது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல ஜலகண்டேஸ்வரர் கோவிலில் கடந்த 11-ந் தேதி வேலூரை சேர்ந்த ஒரு ஜோடிக்கு திருமணம் நடக்க இருந்தது. அப்போது மணமேடை வரை ஜோடியினர் வந்தனர். அங்கு திடீரென அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அந்த திருமணமும் திடீரென நின்று போனது. இதற்கு வரதட்சணை மற்றும் மாப்பிள்ளை மணப்பெண்ணை அடித்தது காரணமாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story