தகராறு செய்த தந்தை வெட்டிக்கொலை
தகராறு செய்த தந்தையை வெட்டிக்கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்
திருமயம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள அரங்கிணாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் என்கிற போதுமணி (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள கிரஷர் ஒன்றில் தினக்கூலியாக வேலை பார்த்து வந்தார். சுப்பிரமணியன் தினமும் மது குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்வதோடு மட்டுமல்லாது அருகில் உள்ளவர்களிடமும் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல நேற்று மாலையும் சுப்பிரமணியன் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரது மகன் பிரேம்குமார்(20), சுப்பிரமணியனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் தலை, மார்பு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மகன் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த பனையப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தந்தையை கொலை செய்ததாக பிரேம்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story