நகர்ப்புற தேர்தலுக்கு பிறகு தி.மு.க.வின் முழு ஆட்டம் ஆரம்பம்


நகர்ப்புற தேர்தலுக்கு பிறகு தி.மு.க.வின் முழு ஆட்டம் ஆரம்பம்
x
தினத்தந்தி 15 Feb 2022 1:15 AM IST (Updated: 15 Feb 2022 1:15 AM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் தி.மு.க. நாடகம் நடத்துகிறது என்றும் நகர்ப்புற தேர்தலுக்கு பிறகுதான் தி.மு.க.வின் முழு ஆட்டத்தையும் பார்க்கப்போகிறீர்கள் என்றும் விழுப்புரம் பிரசார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் நகரமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசார கூட்டம் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை தாங்கி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடுகிற ஒரே இயக்கம் அ.தி.மு.க., ஆனால் தி.மு.க.வை பொறுத்தவரை மன்னர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த 8 மாத தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்காக என்ன செய்தார்கள்? தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்களா? அந்த வாக்குறுதியை நிறைவேற்ற திட்டங்கள் வகுத்திருக்கிறார்களா? என்று மக்கள் சிந்தித்து பாருங்கள். கொடுத்த வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் மறந்து விட்டார்.

தி.மு.க.வின் முழு ஆட்டம்

இந்த ஆட்சியின் அவலத்தை இன்னும் 4 ஆண்டுகாலம் சகித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள். தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கை மணி அடிக்கவில்லையென்றால் நகரமன்ற தேர்தலுக்கு பிறகுதான் தி.மு.க.வின் முழு ஆட்டத்தையும் பார்க்கப்போகிறீர்கள். தி.மு.க.வின் முழு முகத்தையும் அவர்கள் இன்னும் காட்டவில்லை, இந்த தேர்தலுக்கு பிறகு காட்டுவார்கள்.  நீங்கள் வாக்குச்சாவடிக்கு செல்லும்போது 2006-11 தி.மு.க. ஆட்சியில் மக்கள் எப்படி இருந்தார்கள், 2011-2021 அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் எப்படி இருந்தார்கள் என்பதை மட்டும் சிந்தித்து பாருங்கள். அதன் பிறகு தி.மு.க.விற்கு 50 ஆண்டுகாலம் ஓட்டுப்போட மாட்டீர்கள்.

நீட் தேர்வில் நாடகம்

நீட் தேர்வு விஷயத்தில் தி.மு.க., இந்த நாட்டு மக்களையும், மாணவர்களையும் ஏமாற்றி வஞ்சித்து வருகிறது. பெரும்பாலான தனியார் மருத்துவ கல்லூரிகளை நடத்தி கொண்டிருப்பவர்கள் தி.மு.க.வின் அமைச்சர்கள். அவர்கள் பலன்பெற வேண்டும் என்பதால் நீட் வேண்டாம் என தி.மு.க. அரசு கூறி வருகிறது. நீட் தேர்வில் தி.மு.க. நாடகம் நடத்துகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் சக்கரபாணி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. முத்தமிழ்செல்வன், நகர செயலாளர் வண்டிமேடு ராமதாஸ், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், பேட்டை முருகன், சுரேஷ்பாபு, கண்ணன், ராஜா, நகர துணை செயலாளர் வக்கீல் செந்தில், நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

Next Story