முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை பிரசாரம்


முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை பிரசாரம்
x
தினத்தந்தி 15 Feb 2022 1:43 AM IST (Updated: 15 Feb 2022 1:43 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் இன்று ஒரே நாளில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிரசாரம் செய்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர்கள் பேசுகிறார்கள்.

தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று ஒரே நாளில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாரதீய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிரசாரம் செய்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அவர்கள் பேசுகிறார்கள்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் சாதாரண நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் 2 மாநகராட்சிகள், 2 நகராட்சிகள், 20 பேரூராட்சிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) காணொலி காட்சி மூலம் மாலை 4 மணிக்கு பிரசாரம் செய்கிறார். அவருடைய பேச்சு தஞ்சை மாநகரில் மட்டும் 52 இடங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
52 இடங்களில் ஒளிபரப்பு
இதற்காக தஞ்சை மாவட்ட தி.மு.க அலுவலகம் என கலைஞர் அறிவாலயத்தின் எதிரே உள்ள திடலில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு அங்கு மிகப் பெரிய திரையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 
இதில் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் வேட்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதுதவிர 51 வார்டுகளிலும் 51 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
இதுபோல் தஞ்சை மாவட்டத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம் செய்கிறார். 
இன்று காலை கும்பகோணத்தில் பிரசாரம் செய்யும் அவர் பின்னர் தஞ்சை ரெயில் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே காலை 11 மணிக்கு தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், 51 வார்டு வேட்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அண்ணாமலை பிரசாரம்
இதேபோல் பாரதீய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை தஞ்சை மாநகரில் போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரம் செய்கிறார். 
காலை 10 மணிக்கு தஞ்சை மகர்நோன்பு சாவடி பகுதியில் உள்ள சின்ன ஆஸ்பத்திரி அருகே அவர் பிரசாரம் செய்கிறார். இதில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Next Story