ரூ.1 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது
பெங்களூருவில் தொழில்அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.87¾ லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில் தொழில்அதிபரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.87¾ லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ரூ.1 கோடி மோசடி
மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர் வின்சர். தொழில் அதிபரான இவர், ஆயத்த ஆடை தொழிற்சாலை வைத்து நடத்தி வருகிறார். வேறு சில தொழிலையும் அவர் செய்து வருகிறார். தான் செய்து வரும் தொழில்களின் வளர்ச்சிக்காக பல கோடி ரூபாய் கடன் வாங்க முயன்றார். அப்போது வின்சரிடம், மும்பையை சேர்ந்த சந்தோஷ், அவரது கூட்டாளிகள் ரூ.100 கோடி கடன் தருவதாக கூறினார்கள். இதனை நம்பிய வின்சர், ரூ.100 கோடி கடனுக்கான முன்பண வட்டியாக ரூ.1 கோடியை சந்தோசிடம் வின்சர் கொடுத்தாா்.
ஆனால் வின்சருக்கு, ரூ.100 கோடி கடன் கொடுக்காமலும், அவரிடம் வாங்கிய ரூ.1 கோடியை திரும்ப கொடுக்காமலும் சந்தோஷ் உள்ளிட்டோர் மோசடி செய்திருந்தனர். இதுகுறித்து எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மோசடி தொடர்பாக சந்தோஷ், சந்தேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்திருந்தனர். இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சிலர் தலைமறைவாக இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
ரூ.87¾ லட்சம் பறிமுதல்
இதையடுத்து, அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த சந்தோசின் கூட்டாளிகள் 3 பேரை எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் கைது செய்துள்ளனர். கைதான 5 பேரும் பெங்களூருவில் நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்குவார்கள். அப்போது வங்கிகளில் கடன் வாங்க திட்டமிடும் தொழில்அதிபர்கள் பற்றிய தகவல்களை திரட்டி, அவர்களுக்கு குறைந்த வட்டியில் பல கோடி ரூபாய்கடன் கொடுப்பதாக கூறி, முன்பணம் வாங்கி மோசடி செய்து வந்தது தெரியவந்துள்ளது.
கைதானவர்களிடம் இருந்து ரூ.87¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீதி பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கைதான 5 பேர் மீதும் எலெக்ட்ரானிக் சிட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story