அந்தியூரில் பரபரப்பு: துவரைக்கு சரியான விலை கிடைக்காததால் விவசாயிகள் சாலை மறியல்
துவரைக்கு சரியான விலை கிடைக்காததால் அந்தியூரில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அந்தியூர்
துவரைக்கு சரியான விலை கிடைக்காததால் அந்தியூரில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துவரை ஏலம்
அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று துவரை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு அந்தியூர், பருவாச்சி, ஒலகடம், பவானி, அத்தாணி, ஆப்பக்கூடல், எண்ணமங்கலம், கோவிலூர் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் 1,700 மூட்டைகளில் துவரையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் துவரை குவிண்டால் ஒன்று அதிகபட்ச விலையாக ரூ.5 ஆயிரத்து 300 வரை ஏலம் போனதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சாலை மறியல்
கடந்த வாரம் துவரை குவிண்டால் ஒன்று 6 ஆயிரத்து 300-க்கு விலை போனது. ஆனால் இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.1,000 விலை குறைந்து ஏலம் கேட்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு நிர்ணயம் செய்த ஆதார விலையான குவிண்டால் ஒன்று ரூ.6 ஆயிரத்து 300 ரூபாய் எங்களுக்கு கிடைக்கவில்லை எனக்கோரி விவசாயிகள் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்னால் உள்ள அந்தியூர்- சத்தி ரோட்டில் மாலை 5.40 மணி அளவில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்ததும் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், அந்தியூர் தாசில்தார் விஜயகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து 6.40 மணி அளவில் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். அப்போது அதிகாரிகளிடம், விவசாயிகள் கூறுகையில், ‘துவரைக்கு மத்திய அரசு அறிவித்து உள்ள ஆதார விலையை வழங்க வேண்டும். ஏலம் நடந்த அன்றே அதற்கான தொகையை வழங்க வேண்டும். விவசாய விளைபொருட்களை வாங்குவதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வர வைக்க வேண்டும்,’ என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து இரவில் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்த சம்பவத்தால் அந்தியூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story